ரவுடி பாம் சரவணனுக்கு 30ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்..!
துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட ரவுடி பாம் சரவணனுக்கு 30ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வைக்க நீதித்துறை நடுவர் ரேவதி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் சரவணன் என்கிற பாம் சரவணன். பிரபல ரவுடியான இவர் மீது ஆறு கொலை வழக்குகள் இரண்டு வெடிகுண்டு வீசிய வழக்குகள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இதில் மூன்று கொலை வழக்குகளில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த நிலையில் அவரைப் பிடிக்க நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
சில ஆண்டுகளாகவே தலைமறைவாக இருந்த நிலையில் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டு டயாலிசிஸ் பாதிப்படைந்து ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் வரதபாளையம் பகுதியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் ரவுடிகள் தடுப்பு பிரிவு போலீசார் ஆந்திரா மாநிலத்திற்கு சென்று அவரை கைது செய்து சென்னை அழைத்து வந்தனர்.
அப்போது எம்கேபி காவல் நிலையம் அருகே தப்பி சென்று போலீசாரை நோக்கி வெடிகுண்டு வீச முயற்சித்ததால் போலீசார் சுட்டு பிடித்தனர். தற்பொழுது அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வரும் நிலையில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ரவுடி பாம் சரவணன் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.
எழும்பூர் பத்தாவது நீதித்துறை நடுவர் ரேவதி விசாரணை மேற்கொண்டு 30 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார். இதனை அடுத்து தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து அவர் கைதிகள் பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை நிறைவு பெற்ற பின்னர் புழல் மத்திய சிறையில் அடைக்கப்படுவார் எனவும் போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
தலைமறைவாக இருந்த பாம் சரவணன் கோயம்பேடு பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி பன்னீர் செல்வத்தை முன்விரோதம் காரணமாக எரித்து கொலை செய்யப்பட்டதாக வாக்குமூலம் அளித்துள்ள நிலையில் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்கில் துப்பு கிடைத்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாகவும் சிஎம்பிடி போலீசார் அவரை காவலில் எடுத்து விசாரித்து கோயம்பேடு வழக்கிலும் கைது செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
What's Your Reaction?