செந்தில் பாலாஜி கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம்.. தடய அறிவியல் கணினிப் பிரிவு உதவி இயக்குநரை விசாரிக்க தடை

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், தடய அறிவியல் கணினிப் பிரிவு உதவி இயக்குநரை தவிர்த்து மற்ற சாட்சிகளிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

Jan 27, 2025 - 18:56
 0
செந்தில் பாலாஜி கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம்.. தடய அறிவியல் கணினிப் பிரிவு உதவி இயக்குநரை விசாரிக்க தடை
நீதிமன்றத்தில் ஆஜரான அமைச்சர் செந்தில் பாலாஜி

அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அந்த துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி கோடிக்கணக்கில் பணத்தை ஏமாற்றியதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக  கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூன் 14 -ஆம் தேதி செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்தது. இதைத் தொடர்ந்து அவர் வகித்த மின்சாரத் துறை, நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை, அமைச்சர் முத்துசாமிக்கும் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது. 

இதையடுத்து  243 நாட்கள் வரை இலாகா இல்லாத அமைச்சராகவே செந்தில் பாலாஜி தொடர்ந்தார். அவருடைய ஜாமீனுக்கு அமலாக்கத் துறை எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் தனது அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்தார். இதையடுத்து, பல முறை ஜாமீன் மனு ரத்தான நிலையில் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்திருந்தார். 

தொடர்ந்து, அவருக்கு கடந்த செப்டம்பர் மாதம் 26-ஆம் தேதி ஜாமீன் வழங்கப்பட்டது. செந்தில் பாலாஜி ஜாமினில் வெளிவந்த ஓரிரு நாட்களில் தமிழக அமைச்சரவையில் மீண்டும் மாற்றம் ஏற்பட்டது. அதன்படி, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அவர் ஏற்கனவே வகித்து வந்த மின்சாரத்துறை மற்றும்  மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை வழங்கப்பட்டது. 

இந்நிலையில், இந்த வழக்கு  இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆஜராகி இருந்தார். அவர் தரப்பில், வழக்கு தொடர்பான பெண் டிரைவ், ஹார்ட் டிஸ்க் உள்ளிட்ட டிஜிட்டல் வழக்கு ஆவணங்களின் நகல்களை தங்களுக்கு வழங்க கோரி  சிறப்பு நீதிமன்றத்தில் கேட்டிருப்பதாகவும் அதுவரை, வழக்கில் சாட்சியாக உள்ள தடய அறிவியல் துறையின் கணிணிப்பிரிவு உதவி இயக்குநர் மணிவண்ணிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்த கூடாது என தெரிவிக்கப்பட்டது.

அப்போது அமலாக்கத்துறை  தரப்பு சிறப்பு வழக்கறிஞர் ரமேஷ் ஆஜராகி, தடய அறிவியல் கணினிப் பிரிவு உதவி இயக்குநரை தவிர்த்து விட்டு,  மற்ற சாட்சிகளிடம் விசாரணை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.  இதற்கு அனுமதியளித்த நீதிபதி கார்த்திகேயன், வழக்கின் விசாரணையை பிப்ரவரி 6-ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow