Rain Update: அதிகனமழை எச்சரிக்கை... சம்பவம் இருக்கு... மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்ற அவசர உத்தரவு
அதிகனமழை எச்சரிக்கையை தொடர்ந்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை: கடந்த சில தினங்களாக சென்னையில் இரவு நேரங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்ட நிலையில், வடகிழக்குப் பருவமழை அதன் வேலையை காட்டத் தொடங்கியுள்ளது. அதேபோல், தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் காணப்பட்டாலும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில், வரும் 15ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த சென்னை மாநகராட்சி ஆணையருக்கும், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், வருவாய் நிர்வாக ஆணையர் ராஜேஷ் லக்கானி கடிதம் அனுப்பியுள்ளார். அதில், மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்யவும், பேரிடர்களை கையாள்வதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கவும் அறிவுறுத்தியுள்ளார். கன முதல் மிக கனமழை பெய்யும் பட்சத்தில், அனைத்து மாவட்டங்களிலும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இயந்திரங்களை தயார் நிலையில் வைத்திருக்கவும் அறிவுறுத்தியுள்ள அவர், மாவட்ட அளவில் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். இதனிடையே, வங்கக் கடலில் நாளை (அக்.12) புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வங்கக்கடலில் நாளை வளிமண்டல சுழற்சி உருவாக உள்ளதாகவும், அது மேலும் தீவிரமடைந்து புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் எனவும் குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் மழை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரியில் இன்று மிக கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது. அதேபோல், திருப்பூர், கோவை, விழுப்புரம், கடலூர், மதுரை, திண்டுக்கல், கரூர், திருச்சி, நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், நீலகிரி, பெரம்பலூர், ஈரோடு மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனிடையே, தனியார் வானிலை ஆராய்ச்சியாளரான தமிழ்நாடு வெதர்மேனும் கனமழை குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்னும் மூன்று அல்லது நான்கு தினங்களுக்கு மழை வெளுத்து வாங்கும் என குறிப்பிட்டுள்ளார். விட்டு விட்டு மழை பெய்தாலும் அது சிறப்பான சம்பவமாக இருக்கும் எனவும், டிசம்பர் மாதத்தை விட இந்த அக்டோபரில் வேற லெவலில் மழை இருக்கும் என்றும் கூறியுள்ளார். இதனால் அக்.15ம் தேதி வரை பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும், முக்கியமாக வெளியே செல்லும் போது ரெயின் கோர்ட் அல்லது குடை எடுத்துச் செல்வது ரொம்பவே நல்லது.
What's Your Reaction?