காங். பெண் பிரமுகர் கொலை அரசியலில் அசுர வளர்ச்சி காரணம் இதுதானா..?
ராகுல் காந்தியுடன் போட்டோ.... ஓவர் நைட்டில் உலகம் முழுக்க பிரபலம்... குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி... இப்படி ஹரியான காங்கிரஸில் இளம் புயலாக வலம் வந்த ஹிமானி நர்வால், சூட்கேஸில் சடலமாக மீட்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு அதன் மூலம் பிரபலமானவர் ஹரியானாவை சேர்ந்த காங்கிரஸ் பெண் பிரமுகர் ஹிமானி நர்வால்.... 22 வயதான ஹிமானி நர்வால், சட்டம் படித்துள்ளதோடு, ஹரியாணா காங்கிரஸ் கட்சியில் இணைந்து தீவிரமாக அரசியலில் களமாடி வந்தார். முன்னாள் முதலமைச்சர் பூபிந்தர் ஹூடாவின் ஆதரவாளராக சுற்றிக்கொண்டிருந்த ஹிமானி நர்வால், ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ என்ற ஒற்றுமை யாத்திரையிலும் பங்கேற்றார்.
அப்போது ராகுல் காந்தியுடன் அவர் எடுத்துக்கொண்ட போட்டோ, சமூக வலைத்தளங்களில் செம வைரலானது. அதன் பின்னர் தான் அவருக்கு அரசியலில் சுக்ர திசை அடித்தது. இன்னொரு பக்கம் இன்ஸ்டாவிலும் ஆக்டிவாக இருந்த ஹிமானி நர்வால், அடிக்கடி போட்டோ, வீடியோ என ரீல்ஸ் போட்டும் அசரடித்து வந்தார்.
இந்த நிலையில் தான், ஹரியானா மாநிலத்தின் 7 நகராட்சிகளுக்கான மேயர் மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்ற நாளன்று, ரோத்தக் சம்பலா பேருந்து நிறுத்தம் அருகே சூட்கேஸில் இருந்து ஹிமானி நர்வால் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார், சிசிடிவி வீடியோவை அடிப்படையாக வைத்து சச்சின் என்பவரை கைது செய்தனர்.
அதன்பின்னர் அவர் கொடுத்த வாக்குமூலம் போலீஸாரையே அதிர வைத்துள்ளது. அதாவது ஹிமானி நர்வாலின் தாயார் டெல்லியில் வசித்து வருவதால், அவரோ தனது பாட்டியுடன் ஹரியாணாவில் தங்கியுள்ளார். ஆனால், ஹிமானியின் பாட்டியும் சில மாதங்களுக்கு முன் இறந்துவிட்டதாகத் தெரிகிறது. இதனால் தனியாக வசித்து வந்த ஹிமானி நர்வாலுக்கும், கைதான சச்சின் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. சச்சின் அடிக்கடி ஹிமானியின் வீட்டுக்கு செல்வதும் அங்கேயே தங்குவதுமாக இருந்துள்ளார். ஆனால், சம்பவத்தன்று இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமான சச்சின், ஹிமானி நர்வாலின் கையை துப்பட்டாவால் கட்டி வைத்து, பின்னர் செல்போன் சார்ஜரால் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். அதோடு, ஹிமானி நர்வாலின் மொபைல், லேப்டாப், நகை, பைக் ஆகியவற்றையும் திருடிச் சென்றுள்ளார். இறுதியாக ஹிமானி நர்வாலின் சடலத்தை சூட்கேஸில் வைத்து இழுத்துச் சென்ற அவர், அதனை ரோத்தக் சம்பலா பஸ் ஸ்டாப் அருகே வைத்துவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இதுகுறித்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வரும் நிலையில், ஹிமானியின் தாய், தனது மகளின் அரசியல் வளர்ச்சி பிடிக்காமல் தான் இந்த கொலை நடந்திருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
ஹிமானிக்கு நெருங்கிய நண்பர்கள் யாரும் கிடையாது எனக் கூறியுள்ள அவர், இந்த கொலைக்கு காரணம் பணமோ அல்லது நகையோ அல்ல என திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதனால், இது அரசியல் கொலையா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரித்து வருகின்றனர். குறுகிய காலத்தில் அரசியலில் மிகவும் பிரபலமடைந்த காங்கிரஸ் பெண் பிரமுகர் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் அரியானா அரசியலை உலுக்கு வருகிறது.
What's Your Reaction?






