2006-2011ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் உயர்கல்வி மற்றும் கனிம வளங்கள், சுரங்கத்துறை அமைச்சராக க.பொன்முடி பதவி வகித்தபோது, விழுப்புரம் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகளவில் செம்மண் வெட்டி எடுத்ததன் மூலம், அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி, உறவினர் ராஜமகேந்திரன் உள்ளிட்டோர் மீது, 2012ல் தமிழக லஞ்ச ஒழிப்பு துறை பதிவுசெய்த வழக்கு விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு அமலாக்கத் துறையினர், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்திய நிலையில், செம்மண் முறைகேடு தொடர்பாக கிடைத்த பெருந்தொகை ஹவாலா பரிவர்த்தனைகள் மூலம் வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாகவும் கூறி, முக்கிய ஆவணங்களும், 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான பிரிட்டன் பவுண்ட்கள் உள்பட 81 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், 41 கோடியே 90 லட்சம் ரூபாய் வங்கி நிரந்தர வைப்பீடு முடக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத் துறை தெரிவித்திருந்தது.
சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தில் திமுக முன்னாள் எம்.பி. கவுதம சிகாமணி, கே.எஸ். ராஜ மகேந்திரன், வி.ஜெயசந்திரன், கே. சதானந்தம், கோபிநாத் மற்றும் கே.எஸ் பிசினஸ் ஹவுஸ் நிறுவனம் ஆகிய ஆறு பேருக்கு எதிராக அமலாக்கத் துறை சார்பில் 2023 ஆகஸ்ட் மாதம் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் 90 பக்க குற்றப்பத்திரிகையை அமலாக்கதுறை தாக்கல் செய்து.
இந்த வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை வந்தபோது அமலாக்கத்துறை தரப்பில் கூடுதல் குற்றப்பத்திரிகை மற்றும் 26 கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்தது. அதில் அமைச்சர் பொன்முடி, கன்புளியன்ஸ் நிறுவனம் அமன் நிர்வாக இயக்குநர் கவுதம சிகாமணி, கே.எம்.ஸ்பெஷலிட்டி மருத்துவமனை அதன் நிர்வாக இயக்குநர் அசோக் சிகாமணி, கே.எஸ்.மிணரல்ஸ் நிறுவனம், பி.ஆர்.எம் நிறுவனம் அதன் நிர்வாக இயக்குநர் கே.எஸ்.ராஜ மகேந்திரன் ஆகியோர் சட்டவிரோதமாக பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ளதாக குற்றபத்திரிகையில் அமலாக்கதுறை குற்றம்சாட்டியுள்ளது.
இந்த கூடுதல் குற்றபத்திரிகை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எழில் வேலவன் அமலக்கதுறை தாக்கல் செய்த கூடுதல் குற்றபத்திரிகையில் உள்ள பொன்முடி, மற்றும் கவுதம சிகாமணி, அசோக் சிகாமணி உள்ளிட்டோர் மார்ச் 19 தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப உத்தரவிட்டு விசாரணை அன்றைய தினத்திற்கு தள்ளிவைத்தார்.