அரசியல்

பாஜகவிற்கு பச்சை கொடி..? கூட்டணி கணக்கில் மனமாற்றம்..! ஹிண்ட் கொடுத்த இபிஎஸ்..!

பாஜகவுடனான கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமியும், அதிமுகவுடனான கூட்டணிக்கு அண்ணாமலையும் மழுப்பலாக பதில் சொல்லி இருப்பது தமிழக அரசியல் களத்தை சூடுபிடிக்க வைத்துள்ளது. தாமரையுடன் இணைகிறதா இரட்டை இலை? சிவராத்திரிக்கு பிறகு அடுத்தடுத்து, தலைவர்கள் மனமாற்றத்திற்கு காரணம் என்ன?

பாஜகவிற்கு பச்சை கொடி..? கூட்டணி கணக்கில் மனமாற்றம்..! ஹிண்ட் கொடுத்த இபிஎஸ்..!
பாஜகவிற்கு பச்சை கொடி..? கூட்டணி கணக்கில் மனமாற்றம்..! ஹிண்ட் கொடுத்த இபிஎஸ்..!

ஒரு பக்கம் ஆளும் கட்சி, மறுபக்கம் புதிதாக வந்த கட்சி என சட்டமன்றத் தேர்தலுக்காக ஹெவி பிரப்பரேஷன்கள் நடந்துக் கொண்டிருக்க, பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தனது தேர்தல் வியூகத்தை மாற்றியுள்ளதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. 

2021 சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு, அந்தரத்திலேயே தொங்கிக் கொண்டிருந்த அதிமுக – பாஜக கூட்டணியானது, ஜெயலலிதா குறித்த அண்ணாமலையின் சர்ச்சைப் பேச்சால் முறிவை சந்தித்தது. குஜராத்தின் மோடியா, இல்லை தமிழ்நாட்டின் இந்த லேடியா என ஜெயலலிதா கர்ஜித்ததைப் போல, இப்போது மட்டுமல்ல இனி எப்போதும் பாஜக உடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று டெல்லி தலைமைக்கு ஷாக் கொடுத்தார் எடப்பாடி பழனிசாமி. 

இபிஎஸின் இந்த முடிவால், அதிர்ந்துபோன டெல்லி தலைமை, பல விதங்களிலும் அவரை சமாதானப்படுத்த முயற்சி செய்தததாகவும், மாஜிக்களை வைத்து தூது அனுப்பியதாகவும், மிகப்பெரிய ஆஃபர்களையும் கொடுத்ததாகவும் கூறப்பட்டது. ’என்ன வேணா நடக்கட்டும், ஆனா நான் முன் வச்ச காலை பின் வைக்க மாட்டேன்’ என்று எடப்பாடி பழனிசாமி கறார் காட்ட, நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது அதிமுக. அப்போதும், பாஜகவுடன் கூட்டணி வைக்க முடியாது என்று அடம்பிடித்த எடப்பாடி, ‘I will face the consequences” என்று திமிராக பேசி வந்ததாகக் கூறப்படுகிறது. பாஜகவுக்கும் தனித்து நிற்பது பெரிய அளவில் ஸ்கோப் தராது என்பதால், அதிமுகவுடன் கூட்டணி வைத்தாக வேண்டியதே பிரதான நோக்கமாக இருந்தது. இதனால் எதற்கும் அசைந்துக் கொடுக்காத எடப்பாடியை ரெய்டுகள், கலகக் குரல்கள், இரட்டை இலை வழக்கு என அடுத்தடுத்து மூச்சுத் திணற திணற பழிவாங்கியதாக எம்.ஜி.ஆர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இந்த நிலையில் தான், சிவராத்திரிக்குள் ஒரு முடிவை எட்டாவிட்டால், அதிமுக தலைமை மாற்றப்படுவது உறுதி என்று டெல்லி தலைமை ஸ்டிரிக்ட்டாக சொல்லிவிட்டதாகவும், அதனால் சிவராத்திரியை எண்ணி எண்ணி தூக்கத்தை தொலைத்த எடப்பாடி பழனிசாமி, தன்னை சுற்றியுள்ள அனைத்து பிரச்னைகளுக்கும் ஒரே தீர்வு பாஜகவுடனான கூட்டணி தான் என்று முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

அதன் வெளிப்பாடுத்தான் தற்போது பிரஸ் மீட்டிலேயே பாஜக – அதிமுக கூட்டணிக்கான ஹிண்ட்டை கொடுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி என்கின்றனர் ரத்தத்தின் ரத்தங்கள்... 

சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம், பாஜக உடன் அதிமுக மீண்டும் கூட்டணி அமைக்குமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு பதிலளித்த அவர், “திமுகவை வீழ்த்துவதற்கு வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் பெறுவதற்கு யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைக்கலாம். திமுக தான் எங்கள் எதிரி. திமுகவைத் தவிர எங்களுக்கு வேறு யாரும் எதிரி இல்லை. தேர்தலுக்கு 6 மாதத்துக்கு முன்பு கூட்டணி தொடர்பான தகவல்கள் அறிவிக்கப்படும். தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் உள்ளது. கூட்டணி குறித்து அப்போது பார்க்கலாம்” என்றார். 

பாஜகவுடன் கூட்டணி குறித்து இதுவரை திட்டவட்டமாக மறுத்து வந்த எடப்பாடி பழனிசாமி, தற்போது மழுப்பலாக பதில் சொன்னதோடு, திமுகவிற்கு எதிரான வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் கிடைக்க யாருடன் கூட்டணி வைக்க வேண்டுமோ அவர்களுடன் கூட்டணி வைக்கப்படும் என்று கூறியுள்ளது பாஜக –அதிமுக கூட்டணி குறித்தான ஹிண்ட் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். 

பாஜக குறித்த பேச்சை எடுத்தாலே எதிரி போன்ற மனநிலையில் பேசி வந்த எடப்பாடி பழனிசாமி, தற்போது திமுக தான் தங்கள் ஒரே எதிரி என்று அடக்கி வாசித்துள்ளது, பாஜக உடன் மீண்டும் கூட்டணியில் இணைவதற்கான கிரீன் சிக்னாலாகவே பார்க்கப்படுவதாகக் கூறுகின்றனர் விவரம் அறிந்தவர்கள்.  

ஒருபக்கம், டெல்லி தலைமைக்கு போக்குக் காட்டிவந்த எடப்பாடி பழனிசாமி, பாஜக கூட்டணிக்கு சிக்னல் கொடுக்க, மறுபக்கம் அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று தடாலடியாக பேசிவந்த அண்ணாமலையும், தனது போக்கை மாற்றி பாஜக –அதிமுக கூட்டணிக்கு சம்மதித்துள்ளார் என்றே கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

கூட்டணி குறித்த கேள்விக்கு எடப்பாடி பதிலளித்த அடுத்த சில மணி நேரங்களில் கோவையில், பாஜக தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு கூட்டணி குறித்து அவசர கதியில் தற்போது பேச முடியாது. சென்னையில் இது குறித்து விரிவாக பேச இருக்கிறேன்” என்று அண்ணாமலை தெரிவித்தார். தொடர்ந்து, அவரிடம் அமித் ஷா கடந்த வாரம் வந்து சென்ற பிறகு தான் பல முக்கிய மாற்றங்கள் நிகழ்வதாக கேள்வி எழுப்பப்பட, ”இன்னும் 2 நாட்களில் மீண்டும் அமித்ஷா தமிழ்நாடு வர உள்ளார். பிறகு எத்தனை மாற்றங்கள் வரும்” என்று பதில் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை, பாஜக – அதிமுக கூட்டணி குறித்த கேள்விக்கு, “எல்லோருடைய நோக்கமும் திமுகவை 2026ல் வீட்டுக்கு அனுப்புவதுதான். இன்னும் 6  முதல் 8 மாதங்கள் இருக்கிறது..” என்று பதிலளித்தார். 

அதிமுக – பாஜக கூட்டணி குறித்த கேள்விக்கு, அது தேவையில்லாத கேள்வி என்று கூறிவந்த அண்ணாமலை, தற்போது காலம் பதில் சொல்லும் என்று கூறியுள்ளது, டெல்லி தலைமையின் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு கிடைத்த வெற்றி என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். 

அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிடுவேன் என்று மிரட்டல் விட்ட அண்ணாமலையின் தலைவர் பதவியே தற்போது ஆட்டம் கண்டுகொண்டு இருப்பதால், மீண்டும் தலைவராக வேண்டும் ஆசையால் வேறு வழியில்லாமல் தனது ஈகோவை கைவிட்டு, எடப்பாடியுடன் கைக்கோர்க்க முடிவெடுத்துவிட்டதாக கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இதுவரை, மண்ணெண்ண, வேப்பெண்ண, விளக்கெண்ண, நீ எக்கேடு கெட்டா எனக்கென்ன என்று பாஜக – அதிமுக கூட்டணி குறித்து பேசிவந்த கட்சிகள், தற்போது எடப்பாடியின் கூட்டணி வியூகத்தைக் கண்டு மிரண்டு போயுள்ளதாகக் கூறப்படுகிறது. 

பாஜக உடனான கூட்டணிக் குறித்து எடப்பாடியின் இந்த முடிவு, பாமக, தேமுதிக, தமாகா, அமமுக என பலமான கூட்டணிக்கு ஒருப்பக்கம் வித்திட்டாலும், மறுபக்கம் தனக்குத்தானே குழிதோண்டும் முயற்சியே என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். காரணம், அதிமுகவும் – பாஜகவும் கள்ளக் கூட்டணி வைத்துக் கொண்டிருப்பதாகவும், நாங்கள் அடிக்கிறதுபோன்று அடிக்கிறோம், நீங்கள் அழுவதுபோன்று அழுவுங்கள் என்று நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று திமுக கூறிவருகிறது. இத்தகைய சூழலில், அதிமுகவின் இந்த நிலைப்பாடும், பாஜக எதிர்ப்பு அலையும் திமுகவிற்கு சாதகமாகும் சூழல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.