மாணவியை கொன்ற குரங்கு.. தேர்விற்கு தயாராகி கொண்டிருந்தபோது நேர்ந்த விபரீதம்
பீகார் மாநிலம் பாட்னாவில் குரங்கு தள்ளிவிட்டதால் மாணவி மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![மாணவியை கொன்ற குரங்கு.. தேர்விற்கு தயாராகி கொண்டிருந்தபோது நேர்ந்த விபரீதம்](https://kumudamnews.com/uploads/images/202501/image_870x_6795c871dc90f.jpg)
பீகார் மாநிலம் பாட்னாவின் மஹர் கிராமத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் பிரியா குமார் என்ற மாணவி தன் வீட்டு மாடியில் இருந்து வருகின்ற ஆண்டு தேர்விற்கு படித்து கொண்டு இருந்துள்ளார். பாட்னாவில் நிலவி வரும் அதிகப்படியான குளிர் காரணமாக மாடியில் வெயிலில் இருந்து படித்துள்ளார். அப்போது அங்கு குரங்கு கூட்டம் வந்துள்ளது. குரங்கு கூட்டத்தை கண்டு அச்சமடைந்த பிரியா குமார் அங்கிருந்து தப்பிக்க முடியாமல் திணறியுள்ளார்.
அப்போது அக்கம் பக்கத்தினர் அப்பகுதியில் கூடியதால் தைரியத்தை வரவழைத்து மாணவி படிக்கட்டில் இருந்து இறங்கி ஓட முயற்சித்துள்ளார். இதனை கண்ட குரங்கு ஒன்று ஆத்திரத்தில் பிரியா குமார் மீது பாய்ந்து அவரை தள்ளிவிட்டுள்ளது. இதில் அவர் மாடியில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தார். படுகாயமடைந்த பிரியா குமாரை அவரது பெற்றோர் சிகிச்சைக்காக சிவன் சர்தார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே பிரியா குமார் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து பக்வான்பூர் காவல் நிலைய போலீஸார் கூறியதாவது, படுகாயமடைந்த மாணவியை அவரின் பெற்றோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், மாணவி பலத்த காயம் காரணமாக உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மாணவியின் பெற்றோர் பிரேத பரிசோதனை செய்வதற்கு மறுப்பு தெரிவித்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக புகார் எதுவும் கொடுக்கவில்லை என்றும் போலீஸார் கூறினர்.
குரங்கால் மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் சுற்றித் திரியும் குரங்குகள் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருவதாக அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இனியும் இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறும் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.
சில வருடங்களுக்கு முன்பு உத்தரப்பிரதேச மாநிலம் துங்கா என்ற கிராமத்தில் பிறந்த நான்கு மாதம் ஆன குழந்தையை அதன் தாய் தூங்க வைப்பதற்காக வீட்டின் மூன்றாவது மாடிக்கு கொண்டு வந்து தூங்க வைத்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அங்கு வந்த குரங்கு கூட்டம் தாய் கையில் இருந்த குழந்தையை பறித்து மூன்றாம் மாடியில் இருந்து தூக்கி வீசியுள்ளது. இதில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
What's Your Reaction?
![like](https://kumudamnews.com/assets/img/reactions/like.png)
![dislike](https://kumudamnews.com/assets/img/reactions/dislike.png)
![love](https://kumudamnews.com/assets/img/reactions/love.png)
![funny](https://kumudamnews.com/assets/img/reactions/funny.png)
![angry](https://kumudamnews.com/assets/img/reactions/angry.png)
![sad](https://kumudamnews.com/assets/img/reactions/sad.png)
![wow](https://kumudamnews.com/assets/img/reactions/wow.png)