குப்பைகள் போல் கொட்டிக் கிடந்த விருதுகள்.. பணம் கட்டி ஏமாந்த திரை பிரபலங்கள் அதிருப்தி..
விருது வழங்கும் நிகழ்ச்சியில் குப்பைகள் போல் கொட்டிக்கிடந்த விருதுகளை எடுத்துச்செல்லக் கூறியதால், அதிருப்தி அடைந்த விருது பெற்றவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றதும், செலுத்திய பணத்தை திரும்ப கேட்டதும் சலசலப்பை ஏற்படுத்தியது.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த அருள்புரம் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் தீரா டிஜிட்டல் மார்க்கெட்டிங் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் சார்பில் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் திரைப் பிரபலங்களான நடிகர் பாக்கியராஜ், நடிகர் சதீஸ், KPY பாலா, பாடகர்கள் செந்தில் ராஜலட்சுமி ஆகியோருக்கும், சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், யூடியூபர்கள் உள்ளிட்டோருக்கு விருதுகள் வழங்குவதாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களுக்கும் விருதுகளை பெறுவதற்காக வந்த விருந்தினர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற சிறப்பு விருந்தினர்கள், அங்கிருந்து பாதியிலேயே புறப்பட்டுச் சென்றனர்.
இது குறித்து விருது பெற்றுவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றவர்கள் கூறுகையில், நிகழ்ச்சிக்கு உள்ளே நுழைய அனுமதி கட்டணமாக 2000 முதல் 4000 ரூபாய் வரை வசூலித்ததாகவும், மேலும் ஒரு நபரை உள்ளே அழைத்துச் செல்ல அனுமதி மறுத்து அவருக்கும் கூடுதல் தொகையை வாங்கியதாகவும் குற்றம்சாட்டினர்.
மேலும், திரை பிரபலங்கள் கைகளில் விருதுகள் வழங்கப்படும் என தெரிவித்துவிட்டு குப்பையில் போட்டதுபோல் விருதுகளை போட்டு எடுத்துச் செல்லக் கூறியதாகவும் தெரிவித்தனர். அதேபோல் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் எனக் கூறிவிட்டு, அவற்றை நடத்தாமல் ஏமாற்றியதாகவும், 10 லட்சத்திற்கும் மேல் வசூல் செய்துவிட்டு சரியான முறையில் நிகழ்ச்சியை நடத்தவில்லை என்றும் குற்றம் சாட்டினர்.
மேலும், உரிய அனுமதி இல்லாமல் நிகழ்ச்சியை நடத்தியதாகவும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விருதுகளை வாங்க ஏராளமானோர் வந்திருப்பதாகவும், அவர்களை அவமதிக்கும் வகையிலே இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.
இதனையடுத்து, கொடுத்த பணத்தை திருப்பி செலுத்த வேண்டுமென்றும் கோரிக்கை வைத்தனர். அதேபோல் இதுபோன்ற ஒரு நிகழ்ச்சியை தங்கள் வாழ்நாளில் பார்த்ததில்லை என்றும் அவர்கள் வருத்தத்தோடு சென்றனர். மேலும், இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் செய்தியாளர்களுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?