கேரள தயாரிப்பாளர் சங்கத்தில் 9 பேர் மீது வழக்கு... போலீசார் அதிரடி!
கேரளாவில் பெண் தயாரிப்பாளரிடம் தவறாக நடந்துகொண்டதாகக் கூறி தயாரிப்பாளர் சங்கத்தை சேர்ந்த 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மலையாள சினிமா உலகத்தில் நடிகைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தோலுரித்து காட்டியிருக்கிறது ஹேமா கமிஷன் அறிக்கை. காஸ்டிங் கவுச் முதல் பாலியல் சுரண்டல், பாகுபாடு என்று மோசமான சூழல் நிலவுவதாகவும் அட்ஜஸ்ட்மெண்ட், காம்ப்ரமைஸ் இருந்தால் மட்டுமே நடிகைகளுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு மலையாள திரை உலகத்திற்கு மோசமான ஆண்டாக அமைந்தது என்றே கூற வேண்டும். தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை ஒருவர் சில ரவுடிகளால் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். இந்தச் சம்பவத்தில் சக மலையாள நடிகர் உட்பட சிலர் கைது செய்யப்பட்டனர். மலையாள திரை உலகை மட்டுமல்லாது நாடு முழுவதும் இந்த சம்பவம் பரபரப்பை பற்ற வைத்தது.
மலையாள திரை உலகத்தில் உள்ள பெண்கள் பெரும்பாலும் பயம் மற்றும் பாதுகாப்பு குறித்த கவலைகளை எதிர்கொள்வதாக ஹேமா கமிஷன் ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளது. சூட்டிங் செல்லும் இடத்தில் நடக்கும் மோசமான சம்பவங்களைத் தவிர்க்கவே பலர் தங்கள் பெற்றோரை அல்லது உறவினர்களை உடன் அழைத்துச் செல்வதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
கேரளா சினிமா துறையில் சில கிரிமினல்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் அவர்களுக்காக இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் நடிகைகளை அட்ஜெஸ்மெண்ட் செய்ய வலியுறுத்துவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இதுபோன்ற பிரச்சினைகளைத் தீர்வு காண அதிகாரமிக்க குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்படுகிறது. இந்த குழு உருவாக்கப்பட்டால் சினிமாவில் பெண்களுக்குப் பாதுகாப்பான பணிச்சூழலை உறுதி செய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் திரைப்பட துறையில் உள்ள பிரச்சனை தொடர்பாக கேரள தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தபோது, தன்னிடம் அவமரியாதையாக நடந்து கொண்டதாக பெண் தயாரிப்பாளர் ஒருவர் சிறப்பு விசாரணை குழுவிடம் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட சிறப்பு விசாரணை குழுவினர், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்ய போலீசாரிடம் பரிந்துரைத்தனர்.
இதையடுத்து எர்ணாகுளம் போலீசார் தயாரிப்பாளர் சங்கத்தை சேர்ந்த 9 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
What's Your Reaction?






