லெபனான் மீது தொடர் தாக்குதல்... ஐநா படைகளையும் விட்டுவைக்காத இஸ்ரேல்... உலக நாடுகள் பதற்றம்!
தெற்கு லெபனானில் உள்ள யுனிபில் தலைமையகம், ஐநா அமைதிப்படை தளம் ஆகியவை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது உலக நாடுகள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக பாலஸ்தீனத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதேபோல் இஸ்ரேல் தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என உலக நாடுகள் கோரிக்கை வைத்து வருகின்றன. இந்நிலையில், லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் மத்திய பகுதிகளில், இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் அப்பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.
ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கியமான தலைவர்களை குறிவைத்து, இஸ்ரேல் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், இஸ்ரேலின் தற்போதைய வான்வழி தாக்குதலில், 22 பேர் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அப்போது தெற்கு லெபனானில் உள்ள யுனிபில் தலைமையகத்திலும், அதன் அருகிலுள்ள ஐநா அமைதிப்படை தளம் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேலின் இந்த கண்மூடித்தனமான தாக்குதலில் 2 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐநா அமைதிப்படையின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது சர்வதேச அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் தாக்குதலை சமாளிக்கும் விதமாக, ஈரான் உதவியுடன் லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா ஆதரவு அளித்து வருகிறது. இதனையடுத்து, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதிலும் ஹிஸ்புல்லா அமைப்பினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் மத்திய பகுதிகளை குறிவைத்து இஸ்ரேல் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. அதேநேரம் இஸ்ரேலின் தரைவழி படைகள், ஐநா அமைதி குழு தலைமை தலுவலகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் சொல்லப்படுகிறது. இது தொடர்பாக லெபனான் சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டதாகவும், 117 பேர் காயம் அடைந்தனர்” என்றும் தெரிவித்துள்ளது.
நிவாரணப்பணிகளுக்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் உள்ளடக்கிய அமைதிப்படை குழு லெபனானில் முகாமிட்டுள்ளது. இந்தப் படையில் இந்தியாவைச் சேர்ந்த வீரர்களும் சேவையாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. இதனிடையே ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நஸ்ரல்லா உட்பட அடுத்தக் கட்ட தலைவர்கள் இஸ்ரேல் தாக்குதலில் பலியாகினர். இதற்கு பதிலடியாக கடந்த வாரம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியிருந்தது ஈரான். மேலும், இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துள்ளார் ரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி. நாங்கள் மோதலை விரும்பவில்லை.. யாருடனும் சண்டை போட விரும்பவில்லை. ஆனால் எங்கள் அமைதியை சோதிக்க வேண்டாம். இஸ்ரேல் எங்களை தாக்கினால் அதற்கு அஞ்சமாட்டோம், நாங்கள் போருக்கு முழுமையாக தயாராக உள்ளோம் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?