9,00,000 ஏக்கர் நிலங்களை பறிக்க பாஜக சதி; பணக்காரர்களிடம் வழங்க திட்டம் - அல் அமீன்
9 லட்சம் ஏக்கர் நிலங்களை வக்ஃபு வாரியத்திடம் இருந்து பறிக்க பாஜக அரசாங்கம் சதி செய்கிறது என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில செயலாளர் அல் அமீன் குற்றம்சாட்டி உள்ளார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காட்டு பாவா தெற்கு தெருவில் உள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பள்ளிவாசலில் இன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஷபிக் தலைமையில் நடைபெற்ற இந்த செயற்குழு கூட்டத்தில், மாநில செயலாளர் அல் அமீன் கலந்து கொண்டார்.
கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அல் அமீன், “விருதுநகரில் வரும் 12ஆம் தேதி வக்ஃபு வாரிய திருத்தச் சட்டத்தில் உள்ள மோசடிகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் வகையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்திய அளவில் ஒன்பது லட்சம் ஏக்கர் நிலங்களை வைத்துள்ள வக்ஃபு வாரியத்திடம் இருந்து புறவாசல் வழியாக நிலங்களை பறிக்க பாஜக அரசாங்கம் சதி செய்கிறது.
44 திருத்தங்களை கொண்டு வந்து வக்ஃபு வாரியத்தின் அதிகாரத்தை குறைத்து மக்களிடம் இருந்து சொத்துக்களை பறிக்க பாஜக அரசாங்கம் செயல்படுகிறது. இஸ்லாமியர்களின் நிலங்களைப் பறித்து பெரும் பணக்காரர்களிடம் வழங்குவதற்கான வேலையை பாஜக அரசு செய்கிறது. அதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இதற்காக மிகப்பெரிய போராட்டங்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் முன்னெடுக்கும்.
வக்ஃபு வாரியத்தில் பிற மதத்தினர் வரலாம் என்று நிலையை கொண்டு வருகிறார்கள். இந்து சமய அறநிலை துறையில் திருப்பதி தேவஸ்தானத்தில், எப்படி இந்துக்கள் அல்லாதவர்களை நியமிக்க முடியாதோ அந்த வேலையை இவர்கள் செய்கிறார்கள். தற்போது இருக்கக்கூடிய மத்திய பாஜக அரசாங்கம் எந்த சட்டம் கொண்டு வந்தாலும், அது கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சாதகமாகவே உள்ளது” என்றார்.
மேலும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஆதரவு கொடுக்குமா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, பொதுவாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தில் எந்த கட்சிக்கும் ஆதரவு அல்லது எதிர்ப்பு என்ற நிலைப்பாடு இல்லை. தேர்தல் நேரத்தில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விஷயங்களைத் தான் நாங்கள் செய்வோம். விஜய் தற்போது தான் வந்துள்ளார் அவர் எப்படி செயல்படுவார் என்பதை வருங்காலத்தில் பார்க்கலாம் என கூறினார்.
What's Your Reaction?






