"நெனச்சா பயமா இருக்கு.. கஷ்டப்படுவதே தலையெழுத்து" - ஆட்டோ ஓட்டுநர் வேதனை

சென்னை சாலைகளில் மழை தண்ணீர் தேங்கி இருப்பதால் மிகுந்த அவதி அடைந்து வருவதாக ஆட்டோ ஓட்டுனர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Oct 15, 2024 - 19:30
Oct 15, 2024 - 19:36
 0
"நெனச்சா பயமா இருக்கு.. கஷ்டப்படுவதே தலையெழுத்து" - ஆட்டோ ஓட்டுநர் வேதனை
சாலைகளில் மழை நீர் - ஆட்டோ ஓட்டுநர்கள் வேதனை

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் நிலவும் என தெரிவித்துள்ளது.

அதற்கடுத்த 2 நாட்களில் வட தமிழகம், புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும் எனவும் கூறியுள்ளது. மேலும், கிழக்கு மற்றும் வடகிழக்கு காற்று வீசுவதால் நாளை மற்றும் நாளை மறுநாள் தென்னிந்திய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்க கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை மற்றும் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சை மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது. வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தொடர்ந்து இடைவிடாமல் மழை பெய்து வருவதன் காரணமாக, அதி கன மழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்தது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கன முதல் மிக கனமழை தொடரும் என்றும் சில பகுதிகளில் அதி கன மழை பெய்யக்கூடும் என்பதால் சிவப்பு நிற எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

இந்நிலையில் சென்னை மட்டுமல்லாது புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழையால் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், குடியிருப்புகளிலும், சாலைகளிலும் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மின்சாரம், உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சனைகளால் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்த நெருக்கடியான காலக்கட்டங்களில் குறிப்பாக மழை காலம் தொடங்கி விட்டால் நடுத்தர மக்களுக்கு சொகுசு வாகனம் என்றாலே அது ஆட்டோ தான். பொது போக்குவரத்துக்கு செல்வதை விட மழை காலத்தில் ஆட்டோவில் தான் அதிகம் பேர் பயணிப்பார்கள். தற்போது பெய்து வரும் கனமழையால் சென்னையின் முக்கிய சாலைகளில் மழை தண்ணீர் தேங்கி இருக்கிறது. இதனால் ஆட்டோ ஓட்டுனர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் வெங்கடேசன், "ஆண்டுதோறும் மழையால் அவதிப்படுவது ஆட்டோகாரர்கள் தான். நாளை நினைத்தால் பயமாக இருக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன செய்தார்கள் என்பது தெரியவில்லை. ஆண்டு தோறும் மழை காலத்தில் மக்கள் கஷ்டப்படுவது தான் தலையெழுத்து" என்று தெரிவித்துள்ளார். 

சென்னை துரைப்பாக்கத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர்  பொன்னுவேல், "எல்லா சாலைகளிலும் தண்ணீர் தேங்கி இருப்பதால் ஆட்டோ பழுதாகி விடுகிறது. மழை சமயத்தில் ஆட்டோவை தான் மக்கள் தேடுவார்கள். தற்போது ஆட்டோக்களே சாலைகளில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow