ஆன்டிபயாட்டிக் மருந்துகள் எடுத்துக்கொள்பவரா நீங்கள்?.. பகீர் கிளப்பும் தகவல்
மருத்துவமனைகள் தோறும் ஆன்டிபயாட்டிக் மருந்துகள் வழங்குவதற்கான கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் என ஆராய்ச்சி நிறுவன தலைவர் சௌமியா சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற உலக நுண்ணுயிர் எதிர்ப்பு விழிப்புணர்வு வார நிகழ்ச்சியில் எம்.எஸ்.சுவாமிநாதன், ஆராய்ச்சி நிறுவன தலைவர் சௌமியா சாமிநாதன் மற்றும் தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் உறுப்பினர் செயலாளர் எஸ். வின்சன்ட் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சௌமியா சாமிநாதன், “கொரோனா காலக்கட்டத்தில் அதிக அளவில் ஆன்டிபயாட்டிக் மருந்துகளை மக்கள் எடுத்துக்கொண்டதால் உடலில் அதிக அளவில் மருந்தின் வீரியம் அதிகரித்துள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் தரவுகளின் படி ஆன்டிபயாட்டிக் மருந்துகளால் 20 லட்சம் பேர் இறந்துபோகும் நிலை இருப்பதாக கூறப்படுகிறது.
பொதுவாக ஆன்டிபயாட்டிக் மருந்துகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு தேவை. காய்ச்சல், சளி போன்றவற்றிற்கு ஆன்டிபயாட்டிக் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். பாக்டீரியா தொற்று என மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்ட பின்னர் தான் ஆன்டிபயாட்டிக் மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் ஆன்டிபயாட்டிக் கொடுக்கக் கூடாது. மற்ற நாடுகளில் ஆன்டிபயாட்டிக் மருந்து வழங்குவதில் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படுவது போல நம் நாட்டிலும் பின்பற்ற வேண்டும்.
ஒவ்வொரு மருத்துவமனையிலும் ஆன்டிபயாட்டிக் மருந்து வழங்குவதற்காக குழு செயல்படுத்த வேண்டும். எந்த நோயாளிக்கு இதுபோன்ற ஆன்டிபயாட்டிக் மருந்துகளை கொடுக்க வேண்டும் என்பதை மருத்துவ குழுவினர் உறுதி செய்ய வேண்டும்.
ஆன்டிபயாட்டிக் தரவுகளை வெளிப்படையாக மக்கள் முன் தெரிவித்தால் தான் அது குறித்தான விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்படும். கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டதால் உடலில் பாதிப்புகள் ஏற்படுவதாக வரும் தகவல்கள் தவறானது. கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு தான் இதய நோய், நீரிழிவு நோய் போன்றவை ஏற்படுகிறது என விளக்கம் அளித்தார்.
What's Your Reaction?






