மன்னிப்பு கேட்கும் வழக்கமில்லை... சிறைக்கு சென்றவர் செல்வபெருந்தகை - அண்ணாமலை காட்டம்
ஆருத்ரா விவகாரத்தில் பாஜகவினர் தொடர்பு இருந்தால் 3 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் திமுக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.
செய்யாத தவறுக்கு மன்னிப்பு கேட்கும் வழக்கமும் தனக்கில்லை என்றும் செல்வப்பெருந்தகை வழக்கு தொடரட்டும், நீதிமன்றத்தில் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன் என்றும் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பெரம்பூர் பகுதியை சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெள்ளிக்கிழமை [05-07-24] இரவு அவரது வீட்டருகே மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. மேலும், ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலைக்கு எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங்கின் அயனாவரம் இல்லத்திற்கு சென்ற தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திவிட்டு, மனைவி மற்றும் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலையிடம், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பாஜகவுக்கு தொடர்பு இருக்கிறது என்ற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை குற்றச்சாட்டியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அண்ணாமலை, “செல்வபெருந்தகை ஒரு முன்னாள் குற்ற பதிவேட்டில் இருந்தவர் என்பதால் அவருக்கு இது குறித்து தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் எனக்கு அது குறித்து தெரியவில்லை. அப்படி இருந்தால் அவர்களுக்கு பாஜகவில் இடம் இல்லை. பாஜகவின் பதிவேட்டில் எந்த மாவட்ட தலைவரும் குற்றவாளியாக, ரவுடிகளாக இல்லை. அப்படி இருந்தால் சொல்லுங்கள்.
ஆருத்ரா விவகாரத்திலும் அது தொடர்பாக ஆம்ஸ்டிராங் கொலை வழக்கிலும் பாஜகவினர் தொடர்பு உள்ளதாக எழும் யூகங்களுக்கு பதிலளிக்க முடியாது. ஆருத்ரா விவகாரத்தில் பாஜகவினர் தொடர்பு இருந்தால் 3 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் திமுக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்” என தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த செல்வபெருந்தகை, “துக்க வீட்டில் என்ன பேச வேண்டும் என்பது அண்ணாமலைக்கு தெரியவில்லை. ஆருத்ரா குறித்து நான் எழுப்பிய கேள்வியை அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேட்டவுடன் கோபத்துடன், என்னை ரவுடி பட்டியலில் உள்ளவர் என்று தெரிவித்துள்ளார்.
குற்றப்பட்டியலில் உள்ள 261 பேரை பாஜக தலைவர்களாக நியமித்துள்ளீர்கள். அவர்கள் மீது 1977 வழக்குகள் நிலுவையில் உள்ளன. கர்நாடகத்தில் அண்ணாமலை என்ன வேலை செய்து கொண்டிருந்தார். கல்புர்கி, கௌரி லங்கேஷ் உள்ளிட்ட எழுத்தாளர்கள் கொலை செய்யப்பட்டது குறித்து கர்நாடக அரசிடம் அறிக்கை கேட்கவுள்ளேன். அண்ணாமலை எதற்காக தீடீரென ராஜினாமா செய்தார் என்பதை ஆராய வேண்டும்” என்று தெரிவித்து இருந்தார்.
செல்வப்பெருந்தகையின் இந்த பேச்சுக்கு அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் பதிலளித்துள்ளார். அதில், “செல்வப்பெருந்தகை, குற்றவாளிகள் பட்டியலில் இருந்தவர் என்று குறிப்பிட்டதற்கு, மகாத்மா காந்தி வழி வந்த தன்னை, நான் அவமானப்படுத்தி விட்டதாக மிகவும் வருத்தப்பட்டிருக்கிறார்.
மகாத்மா காந்தி வழி வந்த திரு. செல்வப்பெருந்தகை அவர்கள் கடந்து வந்த பாதை.
ஆடிட்டர் பாண்டியன் கொலை வழக்கு - முக்கிய குற்றவாளி
2001 வழக்கு எண் 24(A)/2001. சிபிஐ வழக்கு ஊழல் தடுப்புச் சட்டம் 1988, பிரிவு 13(2) r/w 13(1) (e)
2003வழக்கு எண் 136/2003 இபிகோ 307 – கொலைமுயற்சி
2003வழக்கு எண் 138/2003 – தாக்குதல்
2003வழக்கு எண் 277/03 – கொலை மிரட்டல்
2003வழக்கு எண் 451/2003இபிகோ 324 – பயங்கர ஆயுதங்களால் தாக்குதல், இபிகோ 506 – கொலை மிரட்டல், வெடிபொருள்கள், 1908.
இந்த வழக்கில், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
2008வழக்கு எண் 1464/2003 இபிகோ 147 – கலவரம் செய்தல், இபிகோ 148 – பயங்கர ஆயுதங்களால் கலவரம் செய்தல், இபிகோ 506 – கொலை மிரட்டல்.
கொலைமுயற்சி வழக்கு, கொலை மிரட்டல் வழக்கு, பயங்கர ஆயுதங்களால் தாக்கிய வழக்கு, பயங்கர ஆயுதங்களைப் பயன்படுத்திக் கலவரம் செய்த வழக்கு, வெடிபொருள்கள் வழக்கு, கொலை வழக்கு என பல வழக்குகள், சமூகத்தில் மோசமான குற்ற வழக்குகள்தான். குறிப்பாக, கொலை மிரட்டல் வழக்குகள் மட்டுமே மூன்று வழக்குகள் அவர் மீது தொடரப்பட்டிருந்தன. இது தவிர, ஆடிட்டர் பாண்டியன் கொலை வழக்கு.
குண்டாஸ் வழக்கில் அவர் கைது செய்யப்பட்டிருந்ததை இல்லை என்கிறாரா? இவரை வேறு எப்படிக் குறிப்பிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்? வாழும் மகாத்மா என்றா? அரசியல் லாபங்களுக்காகவும், தன் மீதுள்ள குற்ற வழக்குகளில் இருந்து தப்பிக்கவும், தனது கொள்கைக்கு நேரெதிர் கட்சியில் இணைந்து, காந்தி வழி வந்தேன் என்று நாடகமாடினால் செய்த குற்றங்கள் இல்லை என்று ஆகிவிடுமா?
செல்வப்பெருந்தகை அவர்கள், குற்றவாளிகள் பட்டியலில் இருந்தவர் என்ற கருத்தில் இருந்து நான் பின்வாங்கப் போவதில்லை. செய்யாத தவறுக்கு மன்னிப்பு கேட்கும் வழக்கமும் எனக்கில்லை. செல்வப்பெருந்தகை எங்கு வேண்டுமானாலும் வழக்கு தொடரட்டும். அவரை நீதிமன்றத்தில் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன்” என்று அதில் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?