எனது உயிருக்கும் அச்சுறுத்தல் இருக்கிறது.. உளவுத்துறைக்கு இதுதான் வேலையா - அன்புமணி கோரிக்கை

தமிழ்நாட்டின் மொத்த உளவுத்துறையும் இந்த 20 நாட்களாக விக்கிரவாண்டி தொகுதியில் இருந்துள்ளார்கள். ஒவ்வொரு கிராமத்திலும் 2 உளவுத்துறை அதிகாரிகள் இருந்திருக்கிறார்கள். அதுதான் அவர்களது வேலையா?

Jul 9, 2024 - 18:39
Jul 9, 2024 - 18:41
 0
எனது உயிருக்கும் அச்சுறுத்தல் இருக்கிறது.. உளவுத்துறைக்கு இதுதான் வேலையா - அன்புமணி கோரிக்கை
ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த அன்புமணி

பொது வாழ்க்கையில் எனது உயிருக்கும் அச்சுறுத்தல் இருக்கத்தான் செய்கிறது. யாருக்கு அச்சுறுத்தல் அதிகமாக இருக்கிறதோ அவர்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பெரம்பூர் பகுதியை சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெள்ளிக்கிழமை [05-07-24] இரவு அவரது வீட்டருகே மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. மேலும், ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலைக்கு எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங்கின் அயனாவரம் இல்லத்தில் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினரை சந்தித்து அன்புமணி ராமதாஸ் ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, “நண்பர் ஆம்ஸ்ட்ராங் மறைவு அதிர்ச்சியில் இருந்து இன்னும் நாங்கள் மீளவில்லை. குறிப்பாக எனக்கு தனிப்பட்ட முறையில் பெரிய இழப்பு. ஆம்ஸ்ட்ராங் மறைவு சமூகநீதி இயக்கத்திற்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கிறோம். ஒரு சிலர் சமூகநீதியை வைத்துகொண்டு வாக்கு வங்கிகாக பேசி வருகிறார்கள்.

ஆம்ஸ்ட்ராங் அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்கள், வஞ்சிக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் ஒன்றுசேர வேண்டும், இவர்களுக்கு சமூக நீதி பெற வேண்டும், ஆட்சி அதிகாரம் வரவேண்டும் என்று 20 ஆண்டுகளாக ஆம்ஸ்ட்ராங் கூறி வந்தார். தமிழ்நாட்டில் எண்ணிக்கையில் மிகப்பெரிய சமுதாயமாக உள்ள பட்டியல் மற்றும் வன்னியர் இன சமுதாய மக்கள் ஒன்று சேர்ந்து கல்வி, வேலைவாய்ப்பில் முன்னேற வேண்டும் என ஆம்ஸ்ட்ராங் கூறி இருக்கிறார்.

இவையெல்லாம் மக்கள் மனதில் மனதில் ஆழமான கருத்தாக இருக்கிறது. அவர் கூறிய சமூக நீதிக்காக நாங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து பாடுபடுவோம். அவருடைய கொடூரமான கொலை எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது. இதற்கு முழு விசாரணை வைக்க வேண்டும். சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். இதற்கு பின்னால் யார் இருக்கிறார்? யார் ஏவி விட்டார்? யார் காரணம் என கண்டறிய வேண்டும். இது போன்ற சம்பவங்கள் இனி நடக்கக்கூடாது.

தமிழ்நாடு காவல்துறை முழுமையான விசாரணையை கொண்டு வருவார்களா? என்ற சந்தேகம் எங்களுக்கு இருக்கின்றது. தமிழ்நாடு காவல்துறை மீது எனக்கு மரியாதை உள்ளது. ஆனால் கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு பிறகு எனக்கு நம்பிக்கை இல்லை. கள்ளக்குறிச்சி விவகாரம் சிபிசிஐடி விசாரணை நடத்தி ஒன்றும் வரப்போகிறது கிடையாது. இந்த கூலிப்படை கலாச்சாரத்தை வேரோடு ஒழிக்க வேண்டும்.

ஏழு நாட்களுக்கு முன்பு அதிமுக முக்கிய பிரமுகர் கொலை செய்யப்படுகிறார்கள். நண்பர் ஆம்ஸ்ட்ராங் கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார். கடலூர் மாவட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகி வெட்டப்படுகிறார். இது தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது. இதை கடந்து விட முடியாது. முதலமைச்சர் கீழ் காவல்துறை இயங்கி வருகிறது. புதிதாக சென்னைக்கு ஆணையர் அருண் வந்திருக்கிறார். அவருக்கு சிறிது நாட்கள் கொடுக்கலாம். அவர் உணர்வு பூர்வமாக அந்த வேலையை செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டின் மொத்த உளவுத்துறையும் இந்த 20 நாட்களாக விக்கிரவாண்டி தொகுதியில் இருந்துள்ளார்கள். ஒவ்வொரு கிராமத்திலும் 2 உளவுத்துறை அதிகாரிகள் இருந்திருக்கிறார்கள். அதுதான் அவர்களது வேலையா? விக்கிரவாண்டி தொகுதியில் எந்தெந்த தொகுதியில் ஓட்டு வாங்க முடியும், யாரிடம் பணம் கொடுத்தால் வாக்குப் பெற முடியும் என வேலை செய்துகொண்டு இருக்கிறார்கள். இதுதான் உளவுத்துறை வேலையா? என்னை பொருத்தவரை உளவுத்துறை விக்கிரவாண்டியில் இருந்ததால் தான் ஆம்ஸ்ட்ராங் படுகொலை நடந்திருக்கிறது என்று கூறுகிறேன்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திருமாவளவன் சிபிஐ விசாரணை வேண்டுமென்று கூறுகிறார். அதில் எங்களுக்கும் உடன்பாடு உள்ளது. ஆனால் கள்ளக்குறிச்சி விவகாரத்தில் திருமாவளவன் சிபிஐ விசாரணை வேண்டாம் என்று சொல்கிறார். அதற்கு ஒரு நியாயம், இதற்கு ஒரு நியாயமா? இது அனைத்தும் வெளிவர வேண்டும் என்றால் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்.

பொது வாழ்க்கையில் இருப்பதால் எனது உயிருக்கும் அச்சுறுத்தல் இருக்கிறது. தமிழக காவல்துறை பாதுகாப்பு கொடுக்கிறது. இருந்தாலும் உளவுத்துறை பாதுகாப்பை முக்கியமானதாக கருதுகிறேன். யாருக்கு அச்சுறுத்தல் அதிகமாக இருக்கிறதோ அவர்களுக்கு பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும். தலைவர்களுக்கு மட்டுமல்ல பொதுமக்களுக்கும் பயமின்றி பாதுகாப்பாக இருக்க நடவடிக்கை வேண்டும்” என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow