அடேங்கப்பா! திமுக இவ்வளவு வருமானம் ஈட்டியுள்ளதா?.. அதிமுக எவ்வளவு?.. முழு லிஸ்ட் இதோ!

39 மாநில கட்சிகளின் மொத்த வருவாய் ரூ.1,740 கோடி ஆகும். இதில் திமுக உள்பட முதல் 5 கட்சிகள் மட்டும் மொத்தம் ரூ.1,541.32 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இதில் ரூ.1,285 கோடி தோ்தல் நிதி பத்திரங்கள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Jul 21, 2024 - 08:25
 0
அடேங்கப்பா! திமுக இவ்வளவு வருமானம் ஈட்டியுள்ளதா?.. அதிமுக எவ்வளவு?.. முழு லிஸ்ட் இதோ!
dmk party revenue

டெல்லி: இந்தியாவில் பாஜக, காங்கிரஸ் என தேசிய கட்சிகள் மட்டுமின்றி  மாநில அளவில் செல்வாக்கு உள்ள ஏராளமான கட்சிகள் உள்ளன. மாநில அளவில் ஏராளமான அளவில் சிறு சிறு கட்சிகள் பல்கிபெருகி இருந்தாலும் அங்கீரிக்கப்பட்ட வகையில் 57 கட்சிகள் உள்ளன.

இந்த கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம், நன்கொடைகள் மூலம் வருமானத்தை ஈட்டி வருகின்றன. இந்நிலையில், ஜனநாயக சீா்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆா்) என்ற அமைப்பு இந்த 57 கட்சிகளில் மிக முக்கியமான 39 கட்சிகளின் நிதி நிலைமையை பகுப்பாய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. 2022-23 நிதியாண்டை அடிப்படையாக கொண்டு அதிக வருவாய் பெற்ற கட்சிகளின் பட்டியலை ஏடிஆா் வெளியிட்டுள்ளது.

இதில் தெலங்கானாவில் சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத ராஷ்டிரிய சமிதி (பிஆர்எஸ்) ரூ.737.67 கோடி வருமானம் பெற்று முதலிடத்தில் உள்ளது. மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான ஆளும் திரினாமுல் காங்கிரஸ் ரூ.333.45 கோடி வருவாய் பெற்று 2வது இடம் பிடித்துள்ளது.

தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆளும் திமுக தேசிய அளவில் ரூ.214.35 கோடி வருவாய் ஈட்டி 3வது இடத்தில் அமர்ந்துள்ளது. ஒடிசாவில் முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் ரூ.181 கோடி வருவாயுடன் 4ம் இடத்திலும், ஆந்திராவில் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆா் காங்கிரஸ்  ரூ.74.78 கோடி வருவாய் ஈட்டி 5வது இடத்திலும் உள்ளன.

இதேபோல் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு  தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி ரூ.63.99 கோடி வருவாயுடன் 6வது இடத்திலும், உத்தரபிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி ரூ.32.95 கோடி வருவாயுடன் 7வது இடத்திலும் உள்ளன. தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சியான எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ரூ.20.21 கோடி வருவாய் ஈட்டி 8வது இடத்தில் அமர்ந்துள்ளது.

பீகாரில் முன்னாள் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம்  ரூ.16.85 கோடி வருவாயுடன் 9வது இடத்திலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ரூ.15.32 கோடி வருவாயுடன் 10வது இடத்திலும் வீற்றிருக்கின்றன.

39 மாநில கட்சிகளின் மொத்த வருவாய் ரூ.1,740 கோடி ஆகும். இதில் முதல் 5 கட்சிகள் மட்டும் மொத்தம்   ரூ.1,541.32 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இதில் ரூ.1,285 கோடி தோ்தல் நிதி பத்திரங்கள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 2022-23ம் நிதியாண்டில் மாநில கட்சிகள் மொத்தம் ரூ.481 கோடி செலவிட்டுள்ளன. அதிகப்பட்சமாக திரினாமுல் காங்கிரஸ் ரூ.181.18 கோடி செலவு செய்து முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் திமுக  ரூ.31.41 கோடியும், அதிமுக ரூ.6.88 கோடியும் செலவிட்டுள்ளன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow