திருச்சி மக்களுக்கு குட் நியூஸ்.. ரூ.2,000 கோடியில் JABIL ஆலை.. முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
JABIL நிறுவனம் ஆப்பிள், சிஸ்கோ, HP நிறுவனங்களுக்கு மின்னணு உபகரணங்களை விநியோகம் செய்து வருகிறது. திருச்சியில் JABIL தொழிற்சாலை அமைவதன்மூலம் சுமார் 5,000 பேருக்கு வேலை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், தொழில் நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்க கடந்த மாதம் 27ம் தேதி அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். சுமார் 17 நாட்கள் அமெரிக்காவில் இருக்கும் முதல்வர் ஸ்டாலின், செப்டம்பர் 12ம் தேதி தமிழ்நாடு திரும்புகிறார்.
முதலில் சான் பிரான்சிஸ்கோவில் தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின் பின்பு அங்கிருந்து சிகாகோ சென்றார். சிகாகோவிலும் தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு நிறுவனங்களுடன் முதல்வர் ஒப்பந்தம் மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து சிகாகோ தமிழ் கூட்டமைப்பு மற்றும் சிகாகோ தமிழ்ச் சங்கங்களின் சார்பில் நடைபெற்ற அமெரிக்கவாழ் சந்திப்பு நிகழ்ச்சியில் பட்டு வேட்டி, சட்டை அணிந்து பங்கேற்ற முதல்வர் ஸ்டாலினுக்கு மிகப்பெரும் வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில், திருச்சியில் ஜேபில் (JABIL) நிறுவனத்தின் தொழிற்சாலை அமைக்க அமெரிக்காவில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. JABIL நிறுவனம் திருச்சியில் ரூ.2,000 கோடி முதலீடு செய்ய உள்ளது. இந்நிறுவனம் ஆப்பிள், சிஸ்கோ, HP நிறுவனங்களுக்கு மின்னணு உபகரணங்களை விநியோகம் செய்து வருகிறது. திருச்சியில் JABIL தொழிற்சாலை அமைவதன்மூலம் சுமார் 5,000 பேருக்கு வேலை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் Rockwell Automation நிறுவனம் காஞ்சிபுரத்தில் உள்ள தனது தொழிற்சாலையை ரூ.666 கோடியில் விரிவாக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் அமெரிக்காவில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது. இதன்மூலம் 365 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், ''தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு முக்கிய முதலீடுகள் வந்துள்ளன. இஎம்எஸ்ஸில் உலகளாவிய தலைவராக விளங்கி வரும் JABIL நிறுவனம் திருச்சியில் ரூ.2,000 கோடி முதலீடு செய்ய உள்ளது. இதன் மூலம் 5,000 வேலை வாய்ப்புகள் உருவாகும். மேலும் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்திக்கான புதிய தொகுதி உருவாக்கப்படுகிறது.
மேலும் 'ராக்வெல் ஆட்டோமேஷன்' நிறுவனம் காஞ்சிபுரத்தில் ரூ.666 கோடி முதலீட்டில் தனது உற்பத்தியை விரிவுபடுத்தி 365 புதிய வேலைவாய்ப்புகளை அளிக்க உள்ளது. திறன் இளைஞர்கள் மற்றும் MSMEகள் மற்றும் ஸ்டார்ட்அப்களை ஊக்குவிப்பதற்காக ஆட்டோடெஸ்க் உடனான புரிந்துணர்வு ஒப்பந்தம், நமது ஒட்டுமொத்த தொழில்துறை சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்துகிறது'' என்று கூறியுள்ளார். மேற்க்கண்ட நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட புகைப்படங்களையும் முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
What's Your Reaction?






