Parithabangal: லட்டு வீடியோ சர்ச்சை... H ராஜாவிடம் மன்னிப்புக் கேட்ட பரிதாபங்கள் டீம்... கேஸ் வாபஸ்!

திருப்பதி லட்டு வீடியோ சர்ச்சையான நிலையில், அதற்கு பரிதாபங்கள் யூடியூபர் டீம் வருத்தம் தெரிவித்திருந்தது. தற்போது தமிழ்நாடு பாஜக மாநில ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச். ராஜாவிடம் பரிதாபங்கள் கோபியும் சுதாகரும் மன்னிப்புக் கேட்டுள்ளனர்.

Sep 29, 2024 - 12:23
 0
Parithabangal: லட்டு வீடியோ சர்ச்சை... H ராஜாவிடம் மன்னிப்புக் கேட்ட பரிதாபங்கள் டீம்... கேஸ் வாபஸ்!
H ராஜாவிடம் மன்னிப்புக் கேட்ட பரிதாபங்கள் டீம்

சென்னை: கடந்த சில தினங்களாகவே திருப்பதி லட்டு விவகராம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. திருப்பதி கோயிலில் விநியோகிக்கப்படும் லட்டுகளில், விலங்குகளின் கொழுப்பு இருப்பதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியிருந்தார். ஆந்திராவில் ஜெகன்மோகன் முதலமைச்சராக இருந்தபோது, இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளதாக அவர் கூறியிருந்தார். லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யில், விலங்குகளின் கொழுப்பு, மீன் எண்ணெய் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளது ஆய்வுகளிலும் உறுதியானது. இதனையடுத்து திருப்பதி லட்டு விவகாரம் ஆந்திர அரசியல் வட்டாரத்திலும் பக்தர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே சந்திரபாபு நாயுடுவின் இந்த குற்றச்சாட்டு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என, ஜெகன் மோகன் ரெட்டி பதிலடி கொடுத்திருந்தார். மேலும் இதுதொடர்பாக அறிக்கையும் வெளியிட்டு சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டை மறுத்திருந்தார். இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் பரிதாபங்கள் யூடியூப் தளத்தில் வெளியான வீடியோ சமூக வலைத்தளங்களில் ரொம்பவே வைரலானது. ‘லட்டு பரிதாபங்கள்’ என்ற டைட்டிலில் வெளியான இந்த வீடியோவில், பரிதாபங்கள் கோபியும் சுதாகரும் தனது குழுவினருடன் இணைந்து அட்ராசிட்டி செய்திருந்தனர். 

ட்ரெண்டிங்கான அல்லது பரபரப்பான பிரச்சினைகளை கலாய்த்து காமெடி வீடியோவாக வெளியிடும் பரிதாங்கள் டீம், திருப்பதி லட்டு சர்ச்சையையும் சம்பவம் செய்திருந்தனர். லட்டு பரிதாபங்கள் வீடியோ வெளியான சில நிமிடங்களில் சமூக வலைத்தளங்களில் செம வைரலாகின. திருப்பதி லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு சேர்க்கப்பட்டது முதல், சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டு, நடிகர் கார்த்தியின் சர்ச்சையான கருத்து, பவன் கல்யாணின் கண்டனம் என அனைத்தையும் பரிதாபங்கள் டீம் பங்கம் செய்திருந்தது.  

இந்நிலையில், லட்டு பரிதாபங்கள் வீடியோ திடீரென டெலிட் செய்யப்பட்டது. அதன்பின்னர் இந்த வீடியோ வெளியிட்டதற்காக வருத்தம் தெரிவித்திருந்தது பரிதாபங்கள் டீம். பரிதாபங்கள் சேனலில் வெளிவந்த லட்டு வீடியோ நகைச்சுவைக்காக உருவாக்கப்பட்டது. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் அல்ல, அதையும் மீறி சிலர் மணம் புண்பட்டிருப்பதால், அதற்கு வருத்தம் தெரிவித்து சம்பந்தப்பட்ட காணொளியை நீக்கியுள்ளோம்.. வருங்காலங்களில் இதுபோல் நடைபெறாது என தெரிவித்திருந்தனர். இதனிடையே ஆந்திர மாநில டிஜிபி-யிடம் பரிதாபங்கள் டீம் மீது பாஜக சார்பில் புகார் கொடுக்கப்பட்டிருந்தது.  

திருப்பதி லட்டு குறித்து சர்ச்சையான முறையில் வீடியோ வெளியிட்ட பரிதாபங்கள் டீம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாஜக சார்பில் அதன் விளையாட்டு பிரிவு மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி இந்த புகார் கொடுத்திருந்தார். இந்நிலையில், லட்டு பரிதாபங்கள் வீடியோவுக்காக தமிழ்நாடு பாஜக மாநில ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜாவிடம், பரிதாபங்கள் கோபியும் சுதாகரும் மன்னிப்புக் கேட்டுள்ளனர். இதனையடுத்து அவர்கள் மீதான புகாரை திரும்ப பெற பாஜகவின் அமர்பிரசாத் ரெட்டி முடிவு செய்துள்ளாராம். இதனால் லட்டு பரிதாபங்கள் பஞ்சாயத்து தற்போது முடிவுக்கு வந்துள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow