தேநீர் விற்பனையாளர் பரப்பிய வதந்தியால் நடந்த விபத்து- அஜித் பவார் தகவல்
ரயில் பெட்டியில் தீப்பற்றியதாக தேநீர் விற்பனையாளர் பரப்பிய வதந்தியால் 13 பேர் உயிரிழந்ததாக மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.
உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து மும்பை நோக்கி புஷ்பக் விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. மாலை ஐந்து மணியளவில் மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் உள்ள பச்சோரா என்ற இடத்தை ரயில் வந்தடைந்த நிலையில் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக வதந்தி பரவியது. இதனால் அச்சமடைந்த பயணிகள் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர்.
இதையடுத்து பயணிகள் அலறி அடித்துக் கொண்டு கீழே இறங்கி அருகில் உள்ள தண்டவாளம் வழியாக ஓடியுள்ளனர். அப்போது அந்த தண்டவாளம் வழியாக வந்த கர்நாடக விரைவு ரயில் பயணிகள் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 13 பேர் உயிரிழந்த நிலையில் படுகாயமடைந்த பத்து பேர் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிவாரண தொகை ரயில்வே தரப்பில் அறிவிக்கப்பட்டது. மேலும், மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் மாநில அரசு சார்பில் நிவாரணமா வழங்கப்படும் என்றும் காயமடைந்தோருக்கான சிகிச்சை செலவையும் மாநில அரசே ஏற்கும் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில், புனேவில் செய்தியாளர்களை சந்தித்த மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவார் பேசியதாவது, ரயிலில் உள்ள கேண்டீனின் தேநீர் விற்பனையாளர் ஒருவர் ரயிலின் ஒரு பெட்டியில் தீப்பற்றியதாக கூச்சலிட்டுள்ளார். இதனை உத்திரப்பிரதேச மாநிலம் ஷ்ரவஸ்தியைச் சேர்ந்த இரண்டு பயணிகள் கேட்டு ரயிலில் பொருத்தப்பட்டிருந்த அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தியுள்ளனர். ரயில் நின்றதும் உயிரை காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு இரு பக்கங்களில் இருந்தும் பயணிகள் கீழே குதித்து தப்பிச் சென்றுள்ளனர்.
அப்போது அருகே உள்ள தண்டவாளத்தில் வேகமாக வந்த கர்நாடகா விரைவு ரயில் அவர்கள் மீது மோதியது. தீ விபத்தின் வதந்தியால் வந்த விளைவு தான் இந்த விபத்து என்று கூறிய அவர் உயிரிழந்த 13 பேரில் 10 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். மேலும், மாவட்ட காவல்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்ட நிலையில் சிறிது நேரத்திற்கு பிறகு இரு திசைகளிலும் ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?