அரசுக்கு எதிராக போராட்டம்.. ஏபிவிபி அமைப்பினருக்கு நூதன தண்டனை வழங்கிய நீதிமன்றம் ..!
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி விவகாரம் தொடர்பாக மருத்துவமனைக்குள் அத்துமீறி நுழைந்து போராட்டம் நடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட ஏபிவிபி அமைப்பினர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஒரு மாதம் பணியாற்ற சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு
செயல்படாமல் இருக்கும் திமுக அரசுக்கு சிகிச்சை அளிக்க கோரி சென்னை அரசு மருத்துவமனையில் போராட்டம் நடத்திய ஏபிவிபி அமைப்பினருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்தும், அது தொடர்பான விசாரணை முறையாக நடைப்பெறாமல் திமுக செயல் இழந்திருப்பதாக ஏபிவிபி மாணவ அமைப்பை சார்ந்த யுவராஜ், ஸ்ரீதரன் போராட்டம் நடத்தினர்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவ மனையில் நடத்திய இந்த போரட்டத்தில் திமுக உருவ பொம்மை செயல்படாமல் இருப்பதாகவும் அரசு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க வேண்டும் என ஏபிவிபி மாணவ அமைப்பினர் கோஷங்களை எழுப்பினர்.
இது தொடர்பாக சட்டவிரோதமாக கூடுதல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது, உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் தீ அல்லது எரிய கூடிய பொருள்களை எடுத்து வருவது உள்ளிட்ட பிரிவுகளில் யுவராஜ், ஸ்ரீதரன் ஆகியோரை காவல் துறை கடந்த டிசம்பர் 26 ம் தேதி கைது செய்தது.
இந்த வழக்கில் இருவரும் ஜாமீன் வழங்க கோரிய மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது மாணவர்கள் தரப்பில் வழக்கறிஞர் பால்கனகராஜ் ஆஜராகி, கைது செய்யப்பட்ட யுவராஜ், ஸ்ரீதரன் ஆகியோர் சென்னையில் கல்லூரி படித்து வரும் மாணவர்கள் என்றும் ஏபிவிபி மாணவ அமைப்பினை சார்ந்தவர்கள் எனவும் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவிக்காக மட்டுமே அரசு செயல்படவில்லை என முழக்கங்களை எழுப்பி போராட்டம் நடத்தினார்கள் என வாதம் வைத்தார். காவல் துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் தெளிவாக இல்லை எனவும் வாதம் வைத்தார்.
காவல்துறை தரப்பில், அரசுக்கு எதிராக முழுக்கங்களை எழுப்பி, உருவப்பொம்மை எரிக்க பெட்ரோல் எடுத்து வந்து பொதுமக்களுக்கும், நோயாளிகளுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் அவர்களை கைது செய்திருப்பதாகவும், விசாரணை நிலுவையில் இருப்பதால் ஜாமீன் வழங்க கூடாது என தெரிவிக்கப்பட்டது.
வாதங்களை கேட்ட நீதிபதி, ஏபிவிபி மாணவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். வரும் பிப்ரவரி 4 ம் தேதி வரை கல்லூரி நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களில் சென்னை ராஜூவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் பணியாற்றி, அது தொடர்பான அனுபவங்களை தங்கள் கைப்பட எழுதி, நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என நிபந்தனை விதித்தும் உத்தரவிட்டார்.
What's Your Reaction?