அரவிந்த் கெஜ்ரிவால் கார் மீது கல்வீச்சு.. பாஜக வேட்பாளர் மீது ஆம் ஆத்மி புகார்
புது டெல்லி தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கார் மீது பாஜக கல்வீச்சு தாக்குதல் நடத்திய ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது.
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் இதன் பதவிக்காலம் பிப்ரவரி மாதத்துடன் நிறைவடைய உள்ளது. இதனால், 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபைக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 5-ஆம் தேதி தேர்தல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, பிப்ரவரி 8-ஆம் தேதி பதிவான வாக்குகள் எண்ணி முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுவதால் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த தேர்தலில் புது டெல்லி தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிடும் அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீக்சித் மகன் சந்தீப் தீக்சித்தும், பாஜக சார்பில் முன்னாள் எம்.பி பர்வேஷ் வர்மாவும் போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில், புது டெல்லி தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது திடீரென அரவிந்த் கெஜ்ரிவாலின் கார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. அப்போது பாதுகாப்பு அதிகாரிகள் அவரை காரில் ஏற்றி அனுப்பி வைக்க முயற்சித்த போது ஒரு கல் காரின் மேற்கூரையில் வந்து விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மாவின் அடியாட்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போது அரவிந்த் கெஜ்ரிவால் மீது தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். இந்த தாக்குதலுக்கு டெல்லி மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்று பதிவிட்டிருந்தனர்.
அரவிந்த் கெஜ்ரிவால் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து ஆம் ஆத்மி மூத்த தலைவர் மனீஷ் சிசோடியா வெளியிட்டுள்ள பதிவில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொள்ள தைரியம் இல்லாததால் பாஜக அடியாட்களை வைத்து தாக்குகிறது . பாஜக மலிவான மற்றும் கீழ்தரமான அரசியலை செய்கிறது. இதற்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக பாஜக முன்னாள் எம்பியும், வேட்பாளருமான பர்வேஷ் வர்மா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "மக்கள் கேள்வி எழுப்பிய போது, அரவிந்த் கெஜ்ரிவால் தனது காரை பாஜக தொண்டர்கள் இருவரின் கால்களில் ஏற்றினார். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது எவ்வளவு ஒரு கேவலமான செயல்" என்று குற்றம்சாட்டினார்.
What's Your Reaction?