தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜுனா- நிர்மல் குமார்.. விஜயின் திட்டம் என்ன?

விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா மற்றும் அதிமுக தகவல் தொழில்நுட்ப இணைச் செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார் ஆகியோர் தமிழக வெற்றிக் கழகத்தில் இன்று இணைந்தனர்.

Jan 31, 2025 - 15:37
 0
தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜுனா- நிர்மல் குமார்.. விஜயின் திட்டம் என்ன?
ஆனந்த்-ஆதவ் அர்ஜுனா-நிர்மல் குமார்

வரும் 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் திமுக, அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், சட்டமன்ற தேர்தல் ரேஸில் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியுடன் நடிகர் விஜய் களத்தில் குதித்துள்ளார். இதற்கான பணிகளில் விஜய் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.

ஆரம்பத்தில் சமூக பிரச்சனைகளுக்கு சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டு கண்டனம் தெரிவித்த விஜயை அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் விமர்சித்து வந்தனர். களத்தில் மக்களை சந்திக்காமல் விஜய் இணைய தள அரசியல் செய்வதாக விமர்சித்தனர். இதையடுத்து அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து மனு கொடுத்தார்.

தொடர்ந்து, பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் மக்களை நேரில் சந்தித்தார். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் விரைவில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதால் தனது கட்சியை உட்கட்டமைப்பு பணிகளை மேம்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறார்.

இதையடுத்து, சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக கட்சி அலுவலகத்தில் இரண்டு கட்ட மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இன்று (ஜன 31) தஞ்சை மேற்கு மாவட்டம் மற்றும் கிருஷ்ணகிரி மத்திய மாவட்டம் உள்பட 19 மாவட்ட செயலாளர்கள் தேர்வு கூட்டம் நடைபெற்றது. இதற்காக 19 மாவட்டத்தில் இருந்து மாவட்ட செயலாளர்கள் வருகை தந்துள்ளனர்.

இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து அண்மையில் விலகிய ஆதவ் அர்ஜுனா மற்றும் அதிமுக தகவல் தொழில்நுட்ப இணைச் செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார் ஆகியோர் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர். மேலும், சமூக ஊடகப் பேச்சாளர் ராஜ் மோகனும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரிவு பொதுச்செயலாளராக ஆதவ் அர்ஜுனாவும், துணைப் பொதுச்செயலாளராக சி.டி.ஆர் நிர்மல் குமாரும் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் பேச்சாளர் ராஜ்மோகனுக்கு கொள்கை பரப்பு செயலாளர் பதவி வழங்கப்படும் என கூறப்படுகிறது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow