பெரியார் விவகாரம்: சீமான் அரசியலில் தனிமைப்படுத்தப்படுவார்- ஜெயக்குமார் எச்சரிக்கை
பெரியார் குறித்து பேசுவதை சீமான் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் இல்லாவிட்டால் அரசியலில் தனிமைப்படுத்தப்படுவார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் 13 மணல் குவாரிகள் திறக்க அரசு முடிவு எடுத்துள்ளதாக செய்திகள் வருகிறது. திமுக ஆட்சியில் இயற்கை வளங்கள் தொடர்ந்து சூறையாடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் முயற்சி நடைப்பெற்று வருகிறது.
ஊழல் செய்ய வேண்டும், கொள்ளை அடிக்க வேண்டும், தமிழ்நாட்டை பாலைவனமாக மாற்ற வேண்டும் என்பதே திமுக அரசின் நோக்கம். இயற்கை வளம் சூரையாடுவதை அதிமுக அனுமதிக்காது, மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.
பெரியார் குறித்து சீமான் பேசும் கருத்துகள் குறித்த கேள்விக்கு, மறைந்த தலைவர் புகழுக்கு எந்த வகையிலும் இழுக்கு ஏற்படுத்துவது பயன்பாடற்ற செயல் என தெரிவித்த ஜெயக்குமார், பெரியாரை இழிவுபடுத்துவதை அதிமுக ஒருபோதும் அனுமதிக்காது. பெரியார் குறித்து சீமான் பேசுவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும், தொடர்ந்து பேசினால் அரசியலில் தனிமைப்படுத்தப்படுவார் என எச்சரித்தார்.
நாட்டில் விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பாலியல் வன்கொடுமை விவகாரம் இப்படி எத்தனையோ பிரச்சனைகள் உள்ளது. அதை பற்றி பேசாமல் பெரியார் குறித்து சீமான் பேசுவது மக்களை திசை திருப்பும் செயல். பெரியார் சொல்லாததை எல்லாம் சொல்லியதாக மக்களை திசை திருப்பும் அவசியம் சீமானுக்கு ஏன் வந்தது என கேள்வி எழுப்பினார்.
கிழக்கு கடற்கரை சாலையில் பெண்கள் அச்சுறுத்தப்பட்ட விவகாரம் குறித்த கேள்விக்கு, திமுக செய்யும் அராஜகங்களுக்கு அளவே இல்லாத நிலை உள்ளது. கிழக்கு கடற்கரை சாலை விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்து கடுமையான தண்டனை வாங்கி தர வேண்டும். அதை விடுத்து முதல் தகவல் அறிக்கையை கசிய விடுவது, பாதிக்கப்பட்ட பெண் பெயரை வெளியிடுவது போன்ற செயல்கள் புகாரளிக்க வரும் பெண்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்தும் செயல் என தெரிவித்தார்.
மேலும் அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் செய்தியாளர்களின் செல்போன்கள் பறிமுதல் செய்வது கண்டிக்கத்தக்கது எனவும் பத்திரிகையாளர்களின் செல்போன்களில் உள்ள தரவுகளை காவல்துறை திருட முயல்கிறதா ? என கேள்வி எழுப்பினார்.
சென்னையை அடுத்த படப்பையில் அதிமுக நிர்வாகி பொன்னம்பலம் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் குறித்த கேள்விக்கு, திமுக போன்று வேடிக்கை பார்க்காமல் அதிமுக உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது என பதிலளித்தார்.
What's Your Reaction?