மாணவனின் உயிரை பறித்த ப்ளூடூத் ஹெட்செட்.. நடந்தது என்ன?
ரயில் தண்டவாளத்தில் விழுந்த ப்ளூடூத் ஹெட்செட் எடுக்க சென்ற ராஜகோபால் என்ற மாணவன் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த புது சொரத்தூர் பகுதியைச் சேர்ந்த ராஜகோபால் என்பவர் சென்னை சைதாப்பேட்டை அரசு மாணவர்கள் விடுதியில் தங்கி, நந்தனம் கலைக் கல்லூரியில் பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். வகுப்பறை நேரம் முடித்து, மீதம் உள்ள நேரங்களில் கேட்டரிங் உள்ளிட்ட பார்ட் டைம் வேலை செய்து தனது படிப்பை படித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று கல்லூரியை முடித்துவிட்டு கோடம்பாக்கம் பகுதிக்கு கேட்டரிங் வேலைக்காக ரயிலில் சென்றபோது கோடம்பாக்கம் ரயில் நிலையம் அருகே காதில் மாட்டியிருந்த ப்ளூடூத் ஹெட்செட்டானது ரயிலில் இருந்து கீழே விழுந்துள்ளது.
பின்னர், கோடம்பாக்கம் ரயில் நிலையத்தில் கீழே இறங்கிய கல்லூரி மாணவர் ராஜகோபால், ப்ளூடூத் ஹெட்செட் விழுந்த தண்டவாளத்திற்கு சென்று தனது ஹெட்செட்டை தேடியுள்ளார். அப்போது தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி வந்த மின்சார ரயிலில் 19 வயதான ராஜகோபால் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த மாம்பலம் ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விவசாயம் செய்து வருவதால் வீட்டின் ஏழ்மை நிலையின் காரணமாக தனது மகன் ராஜகோபாலன் அரசு பள்ளியில் படித்து, பின்னர் சென்னையில் விடுதியில் தங்கி கல்லூரி படித்ததாகவும், தனது மகன் பார்ட்டைமில் கேட்டரிங் வேலை பார்த்து தங்களையும், அவரது தேவையையும் பூர்த்தி செய்து கொண்டதாகவும் மாணவனின் தந்தை வேதனை தெரிவித்துள்ளார்.
குறிப்பாக 1.5 லட்ச ரூபாய் மதிப்பிலான பைக்கை வாங்க வேண்டும் என்ற ஆசையில் ராஜகோபாலன் கஷ்டப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக வேலை பார்த்து பணம் சேர்த்ததாகவும், தற்போது அவனே இல்லை என கண்ணீர் மல்க ராஜகோபாலனின் தந்தை முருகன் மற்றும் அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
வீட்டில் அதிகப்படியான கஷ்டம் இருந்த நிலையிலும் படித்து முன்னேற வேண்டும் என்று நினைத்த மாணவர் உயிரிழந்ததால், அவரது குடும்பத்திற்கு அரசு உதவி செய்ய வேண்டும் என உயிரிழந்த மாணவனின் உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
What's Your Reaction?