7 மாஜிக்கள்.... 13 மாநில நிர்வாகிகள்...! அதிமுக தலைமையாகும் செங்கோட்டையன்? ஈசிஆர்-ல் நடந்த ரகசிய மீட்டிங்...?
அதிமுகவில் வெடித்துள்ள உட்கட்சி மோதல் காரணமாக, மாஜிக்கள் சிலர் தலைமையின் மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படும் நிலையில், ஈசிஆர் கெஸ்ட் ஹவுஸில் செங்கோட்டையன் தலைமையில் ரகசிய மீட்டிங் நடந்துள்ளதாக வெளியாகியிருக்கும் தகவல் அதிமுக தலைமையை ஏகத்துக்கும் டென்ஷனாக்கி உள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு இரட்டைத் தலைமையோடு இயங்கிக் கொண்டிருந்த அதிமுகவில், ஒருகட்டத்திற்கு மேல் ஒற்றைத் தலைமை பிரச்னை வெடித்து, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓபிஎஸ் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதன்பிறகு ஒற்றைத் தலைமையாக உருவெடுத்த எடப்பாடி பழனிசாமி, பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்த நிலையில், அண்ணாமலை மீதான அதிருப்தி காரணமாக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். அங்கு தான் எடப்பாடியாருக்கு ஆரம்பித்தது ஏழரை நாட்டுச் சனி என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
அடுத்தடுத்து தொடர் தோல்விகளை சந்தித்ததால் எடப்பாடிக்கு ஆதரவாக இருந்துவந்த மாஜிக்கள், அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்க ஆரம்பித்ததாகவும், பாஜக உடன் கூட்டணி வைக்க வேண்டும் என்றும், ஓபிஎஸ் மற்றும் சசிகலாவுடன் ஒருங்கிணைந்த அதிமுகவை உருவாக்க வேண்டும் என்றும் எடப்பாடிக்கு நெருக்கடிகளை கொடுத்து வருவதாக எம்.ஜி.ஆர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இத்தகைய சூழலில், பாஜகவும் தன் பங்கிற்கு கூட்டணிக்க்காக எடப்பாடியிடம் பேச பல காய்களை நகர்த்தியது. ஆனால், எதுவுமே பலனளிக்காமல் இருந்து வருகிறது. இந்த நிலையில் தான் வேலுமணியை வைத்து எடப்பாடியை ஆஃப் செய்ய பாஜக திட்டமிட்டதாகவும், ஆனால் அந்த பிளான் வொர்க் அவுட்டாகாமல் இருப்பதால், தங்கள் அடுத்த வெப்பனை பாஜக மாற்றியதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த புது வெப்பன், வேறு யாரும் இல்லை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தான் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
அண்மையில், எடப்பாடிக்கு எதிராக தனது அதிருப்தியை வெளிப்படுத்திய செங்கோட்டையனின் கலகக் குரல், கழகத்திற்குள் கலகத்தை ஏற்படுத்தத் தொடங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. அதாவது, எடப்பாடிக்கு எதிராக செங்கோட்டையன் உயர்த்திய கலகக் குரலுக்கு வலுசேர்க்கும் வகையில், அதிமுக மாஜிக்கள் 7 பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் எம்.ஜி.ஆர் மாளிகையை ஆட்டம் காண வைத்துள்ளது.
அதோடு, மாநில நிர்வாகிகள் 13 பேரும் செங்கோட்டையனுக்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளதாகவும், மாவட்டச் செயலாளர்களிடமும் அவர் ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அதில் டெல்டா, தென் மண்டல மாவட்டச் செயலாளர்கள் தங்களது ஆதரவை செங்கோட்டையனுக்கு தெரிவித்துள்ளதாக அதிமுக உள்விவகாரங்களை அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே, கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த மாநில அளவிலான திஷா கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் செங்கோட்டையன் பங்கேற்றது எடப்பாடியை சூடேற்றியதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அன்றைய தினமே மாலை சென்னை ஈசிஆரில் உள்ள தனியார் கெஸ்ட் ஹவுஸில் செங்கோட்டையன் சில அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியதாகவும், அப்போது “தேர்தலுக்கு முன்பாக எடப்பாடி நீக்கப்படுவார்... அதற்குப் பிறகு நான் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஆகிவிடுவேன்..” என்று அதிமுக நிர்வாகிகளிடம் ஆதரவை கேட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.
இந்த தகவலும் எடப்பாடியார் காதிற்கு செல்ல, செங்கோட்டையன் மீதான கோபம் அதிகரித்துள்ளதாகவும், அதன் விளைவாக 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் புறக்கணிக்கப்பட்டார் என்றும் எம்.ஜி.ஆர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்திற்கு ஏ.கே.செல்வராஜ், ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டத்திற்கு திருப்பூர் சி.சிவகாமி ஆகியோரை எடப்பாடி நியமித்துள்ளார் என்று கூறப்படுகிறது. அதாவது, செங்கோட்டையனின் சொந்த மாவட்டத்தில் அண்டை மாவட்ட நிர்வாகிகளை நியமித்து தனது கோபத்தை கொப்பளித்துள்ளார் எடப்பாடி என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
எடப்பாடியின் இந்த ரியாக்ஷனால் செம்ம சூடான செங்கோட்டையன், விரைவிலேயே டெல்லி தலைமையை சந்தித்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகளில் இறங்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், அதிமுக தலைமையே மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, அதிமுகவின் தலைமையாக எடப்பாடியாரே நீடிப்பாரா? அல்லது புதிய தலைமையாக செங்கோட்டையன் உருவெடுப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
What's Your Reaction?






