ஆயுள் முழுக்க ஜெயில் தானா? செந்தில்பாலாஜிக்கு துரோகம் இழைத்ததா திமுக..? முக்கிய புள்ளி சொல்வது என்ன?

Senthilbalaji Bail Issues: செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் கிடைப்பதில் என்ன சிக்கல்? திமுக அவரை கைவிட்டுவிட்டதா? கடைசிவரை அவர் சிறைவாழ்க்கைத்தான் வாழ வேண்டுமா? என்பது குறித்து முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் ஆலோசகராக பணியாற்றிய கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

Sep 5, 2024 - 08:27
Sep 5, 2024 - 17:28
 0
ஆயுள் முழுக்க ஜெயில் தானா? செந்தில்பாலாஜிக்கு துரோகம் இழைத்ததா திமுக..? முக்கிய புள்ளி சொல்வது என்ன?

இதுகுறித்து எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், திமுக வக்கீல் அணியின் team இன் தவறான செயல்பாடுகளால் செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் கிடைப்பது கடினமாகியுள்ளதாகவும், முறையான கைதி என்ற நிலையி்ல் ஆட்கொணர்வு மனு அல்லது ஹேபியஸ் கார்பஸ் (Habeas corpus) தவறாக தாக்கல் செய்த போதே சிக்கல் ஆரம்பித்து விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

தொடர்ந்து, Wrong legal advice அதாவது தவறான சட்ட ஆலோசனை மற்றும் முதல்வர் ஸ்டாலின், அவரின் அமைச்சர்கள் உட்பட கைதி செந்தில்பாலாஜியை சந்தித்தது குற்றம் என்றும், இதே மாதிரி மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் சேலம் சிறையில் குற்றவாளியான அவர் உறவினர் பாறைப்பட்டி சுரேஷை சந்தித்தது சிக்கலானது என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். வீரபாண்டி ஆறுமுகம் தன் உறவினரை சிறையில் சந்தித்த நேரத்தி மத்தியில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததால் இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, ஆனால் தற்போது மாநிலம் மற்றும் மத்தியில் வேறு வேறு ஆட்சி என்பதால் முதலமைச்சர் உட்பட அமைச்சர்கள் செந்தில்பாலாஜியை சந்தித்தது குற்றம் என்பது கே.எஸ்.ராதாகிருஷ்ணனின் கூற்றாக உள்ளது. 

https://x.com/KSRadhakrish/status/1830670235877122154

அரசாங்கம் செய்த தவறு குறித்து சுட்டிக்காட்டிய அவர், செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட அன்று அமைதியாக சம்மனை வாங்கிக் கொண்டு இருந்திருந்தால் கைது நடவடிக்கையே நடந்திருக்காது என்று கூறுகிறார். அப்படியே கைது செய்த பிறகும் ரிமாண்ட் செய்யப்பட்டால் ஜெயிலுக்கு செல்ல வேண்டுமே என்ற நிலை அவருக்கு உருவாகி இருக்காது, உண்மையிலேயே உடல்நிலை சரியில்லாமல் இருந்திருந்தால் உயர்நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்திருந்திருக்கலாம் என்று கே.எஸ்.ஆர் குறிப்பிடுகிறார். 

ஆனால், திமுக வழக்கறிஞர்கள் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தது மிகப்பெரிய தவறு... ஏனென்றால் ரிமாண்ட் செய்யப்பட்ட கீழமை நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்து விட்டு, அது தள்ளுபடி செய்யப்பட்ட பின் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது... நியாயப்படி மீண்டும் செந்தில் பாலாஜி தரப்பு ஜாமின் மனுவையே தாக்கல் செய்திருக்க வேண்டும். மாறாக ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்து செந்தில் பாலாஜியின் கைது சட்டவிரோதமானது, அமலாக்கத் துறைக்கு கைது செய்ய அதிகாரம் கிடையாது, 41A நோட்டீஸ் கொடுக்கவில்லை என்று வாதத்தை மாற்றியது தான் செய்தது மிகப்பெரிய தவறு என்று சட்ட நுணுக்கங்கள் குறித்து விளக்கி உள்ளார் கருணாநிதியின் ஆலோசகராக பணியாற்றிய கே.எஸ்.ராதாகிருஷ்ணன். 

சட்ட நுணுக்கங்கள் குறித்து குறிப்பிட்ட அவர், அமலாக்கத்துறை கைதின்போது 41ஏ நோட்டீஸ் கொடுக்க வேண்டிய அவசியமே கிடையாது என்று கூட தெரியாமல் திமுக வழக்கறிஞர் அணி இருக்கிறார்கள், இதைத்தான் மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன் நீதிமன்ற காவலில் இருக்கும் ஒருவருக்காக கீழமை நீதிமன்றத்தில் ஜாமின் தாக்கல் செய்து அது தள்ளுபடி செய்தபின், எப்படி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யலாம் என்று கேட்டார் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். 

அதோடு, ஐந்து நாட்கள் அமலாக்கத்துறை காவல் கொடுத்தது கீழமை நீதிமன்றம். இங்கேயும் கோட்டை விட்டது செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர் அணி. ஐந்து நாட்களில் இவர் என்ன சொல்லப் போகிறாரோ என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ என்று தான் எதிர்பார்த்தது திமுக வழக்கறிஞர் அணி. அமைதியாக பொறுமையாக செந்தில் பாலாஜியிடம் விசாரித்த அமலாக்கத்துறை குறிப்பிட்ட ஐந்து நாட்கள் காவல் முடிவில் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தது. அப்போது தான் அமலாக்கத்துறையின் நுட்பமான அறிவு வெளிப்பட்டதோடு, யாரும் எதிர்பாராத வண்ணம் 130 பக்க குற்றப்பத்திரிக்கையும், 3000 பக்க ஆவணங்களையும் அதே நாளில் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது அமலாக்கத்துறை. 

பிஎம்எல்ஏ வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர்மீது நீதிமன்ற காவலில் இருக்கும்போதே 60 நாட்களுக்குள் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்து விட்டால் குற்றம் சட்டப்பட்டவருக்கு ஜாமின் கிடைக்கவே கிடைக்காது. அமலாக்கத் துறை செந்தில் பாலாஜியை கஸ்டடி எடுத்ததே அவரிடம் இருந்து ஒரு விஷயமும் பெறுவதற்கு அல்ல என்று கூறியுள்ள கே.எஸ்.ராதாகிருஷ்ணன், உச்சநீதிமன்றம் சொல்லியது போல அமலாக்கத்துறைக்கு கஸ்டடி எடுக்க உரிமை உள்ளது என்பதை நிரூபிக்கத்தான் என்று குறிப்பிட்டார். 

நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட அதே நாளில் குற்ற பத்திரிகை தாக்கல் செய்வார்கள் என்று திமுக வழக்கறிஞர்கள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. அமலாக்கத்துறை காவல் முடிந்து மேலும் ஒரு சில மாதங்கள் கழித்து தான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வார்கள் என்று ஏமாந்து விட்டார்கள். சென்ற வருடம் ஜூன் 13ஆம் தேதி கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியின் 60 நாட்கள் ஆகஸ்ட் 12ஆம் தேதியோடு முடிந்தது. அமலாக்கத் துறையின் காவலும் ஆகஸ்ட் 12ம் தேதியோடு முடிந்து. இங்குதான் அமலாக்க துறையின் மதிநுட்பம் வெளிப்படுகிறது. யாரும் எதிர்பாராத வண்ணம் 3000 பக்கங்கள் கொண்ட ஆவணங்களோடு குற்ற பத்திரிகையை அமலாக்கத் துறை காவல் முடியும் ஆகஸ்ட் 12 அன்றே, அதாவது கைது செய்த 60 ஆம் நாளே தாக்கல் செய்து விட்டார்கள். அதனால்தான் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவலில் இருக்கும் பொழுதே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதால் கடந்த ஒரு வருட காலமாக ஜாமின் கிடைக்கவில்லை என்கிறார் கே.எஸ்.ராதாகிருஷ்ணன். 

இறுதியாக, செந்தில் பாலாஜி வழக்கை விரைவுப்படுத்த தமிழக அரசு முட்டுக்கட்டை போடுவது ஏன்? என்ற கேள்வியை முன்வைத்த கே.எஸ்.ஆர், செந்தில் பாலாஜி வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி, வழக்கின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றதோடு, செந்தில் பாலாஜி வழக்கின் விசாரணைக்கு மற்றும் கோப்புகளுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் 6 மாதமாக காலம் தாழ்த்தியது ஏன்? என நீதிபதி எழுப்பிய கேள்வியையும் குறிப்பிட்டுள்ளார். 

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் ஆலோசகராக பணியாற்றிய கே.எஸ்.ராதாகிருஷ்ணன், இவ்வளவு நுணுக்கமாக விவரங்களை எடுத்து வைத்துள்ள நிலையில், திமுக நிர்வாகிகள் மற்றும் செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள் இதுகுறித்து கேள்விகளை எழுப்பி வருகின்றனர். உண்மையிலேயே திமுக தான் செந்தில்பாலாஜிக்கு ஜாமின் கிடைக்கவிடாமல் செய்கிறதோ? என்ற கேள்வியை எழுப்பி வருவதோடு, தலைமைமீது அதிருப்தி அடைந்துள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow