”காங்கிரஸின் பிரிவினைவாத அரசியலை நிராகரித்த ஹரியானா..” - அமித்ஷா பதிவு!

காங்கிரஸ் கட்சியின் பிரிவினைவாத அரசியலை ஹரியானா மக்கள் நிராகரித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து தெரிவித்துள்ளார்.

Oct 9, 2024 - 02:01
 0
”காங்கிரஸின் பிரிவினைவாத அரசியலை நிராகரித்த ஹரியானா..” - அமித்ஷா பதிவு!

கடந்த 5 ஆம் தேதி ஹரியானா சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில், தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று(அக்.,08) காலை 8 மணிக்கு தொடங்கியது. ஆட்சியை பிடிக்க 46 தொகுதிகளைக் கைப்பற்ற வேண்டிய நிலையில், ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவியது.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து காங்கிரஸ் முன்னிலை வகித்த நிலையில், 10 மணிக்கு பிறகு பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தது. மாறி மாறி பாஜகவும் காங்கிரஸும் முன்னிலை வகித்து வந்த நிலையில், ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது பாஜக. ஆளும் பாஜக 48 தொகுதிகளையும், காங்கிரஸ் 37 தொகுதிகளையும் பிடித்தன. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில்,  தற்போது அங்கு காட்சிகள் அனைத்தும் மாறியுள்ளது. மீண்டும் ஹரியானாவில் பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. 

இந்நிலையில், வெளிநாடுகளுக்கு சென்று தங்கள் வாக்கு வங்கிக்காக நாட்டை அவமதிப்பவர்களுக்கு பாடம் புகட்டப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அமித்ஷா,  “ஹரியானாவில் பாஜக மகத்தான வெற்றி பெற்றுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் மீது விவசாயிகள், ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் இளைஞர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையின் வெற்றியாக உள்ளது. 

சாதி மற்றும் பிராந்தியத்தின் அடிப்படையில் மக்களைப் பிரிக்கும் காங்கிரஸின் எதிர்மறை மற்றும் பிளவுப்படுத்தும் அரசியலை ஹரியானா மக்கள் முற்றிலுமாக நிராகரித்துள்ளனர். வெளிநாடுகளுக்கு சென்று நாட்டை அவமதித்தவர்களுக்கு வீர பூமியான ஹரியானா மக்கள் பாடம் புகட்டியுள்ளனர். 

தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக பாஜகவுக்கு வாய்ப்பளித்த ஹரியானா மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow