விஜய் கல்வி விருது விழாவில் சுடச்சுட தயாராகும் மதிய விருந்து.. என்ன மெனு தெரியுமா?

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நடத்தும் பாராட்டு விழாவில் பங்கேற்பவர்களுக்கு பரிசோடு தடபுடலாக விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் காலை உணவு பரிமாறப்பட்ட நிலையில் மதிய உணவில் என்ன மெனு இடம் பெற்றுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Jun 28, 2024 - 18:23
Jul 1, 2024 - 18:16
 0
விஜய் கல்வி விருது விழாவில் சுடச்சுட தயாராகும் மதிய விருந்து.. என்ன மெனு தெரியுமா?
TVK leader Vijay Kalvi Viruthu Vizha School Students Function today food items

நடிகரும் த.வெ.க. தலைவருமான விஜய் தலைமையில் 2வது ஆண்டு கல்வி விருது வழங்கும் விழா சென்னை, திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் இன்று நடைபெறுகிறது. விஜய் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவிக்கப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் விழா என்பதால் இந்த விழாவில் விஜய் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

கடந்த ஆண்டு 10,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கினார் விஜய். அப்போது விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று மாணவ மாணவிகள் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்தார் விஜய். கட்சி பெயரை தமிழக வெற்றிக்கழகம் என்று அறிவித்து அதனை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார். 

நடப்பாண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தொகுதி வாரியாக முதல் 3 இடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு விஜய் பாராட்டு விழா நடத்துகிறார். இன்று நடக்கும் நிகழ்ச்சியில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, புதுக்கோட்டை, அரியலூர், கோயம்புத்தூர், இராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை, ஈரோடு, தேனி, தர்மபுரி, கரூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி,சேலம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெறுகிறது. 

பிற மாவட்ட மாணவ, மாணவியர்களுக்கு ஜூலை 3 ஆம் தேதி பாராட்டு விழா நடைபெறுகிறது. சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா திருமண மண்டபத்தில் நடைபெறும் விழாவில் பிரமாண்ட முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் முழுக்க முழுக்க நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் ரூ. 5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவ, மாணவியர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் ஆகியோரை பேருந்துகளில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் அழைத்து வந்தனர். மேலும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு அழைத்து சென்றனர். 30க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு அதிகாலையிலேயே விஜய் வருகை தந்துள்ளார். 

நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் மாணவ, மாணவியர்கள் பசியால் வாடுவதை தடுக்க திண்பண்டங்களும் வழங்கப்படுகிறது. மாணவ மாணவிகள் தங்கள் பெற்றோர்களுடன் விழா நடைபெறும் இடத்திற்கு வந்துள்ளனர். 

பரிசு வாங்கியவர்களுக்கு மதிய விருந்தும் தயாராகி வருகிறது. சாதம், வடை, அப்பளம், அவியல்,  மலாய் சான்விச், இஞ்சி துவையல், தயிர் பச்சடி, அவரை மணிலா பொரியல், உருளை காரகறி, வத்தக்குழம்பு, தக்காளி ரசம், கதம்ப சாம்பார், ஆனியன் மனிலா வெற்றிலை பாயாசம், மோர் என மதிய விருந்துக்கான உணவுப்பட்டியல் வெளியாகியுள்ளது. 

வரும் ஜூலை 3ஆம் தேதி 2வது கட்டமாக நடைபெறும் பாராட்டு விழாவில் செங்கல்பட்டு, சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுச்சேரி, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருப்பத்தூர், திருச்சி, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow