திமுகவின் பி-டீம் தான் விஜய் - தவெகவுக்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை
தவெகவின் அரசியல் செயல்பாடு பள்ளிக் குழந்தைகள் போல இருக்கிறது என அண்ணாமலை விமர்சனம்

நடிகைகளின் இடுப்பை கிள்ளிக்கொண்டு அரசியல் செய்கிறார் என விஜய்யை கடுமையாக அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் அலுவலகம் மற்றும் மதுபான ஆலைகளில் நடத்திய சோதனையில் சுமார் ரூ.1000 கோடி ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டிருந்தது.இந்த ஊழலை கண்டித்து இன்று சென்னை எழும்பூரில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அண்ணாமலை அறிவித்திருந்தார்.
முன்னறிவிப்பின்றிதான் இனி பாஜக போராட்டம்
இந்த போராட்டத்துக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்திருந்த நிலையில், கானத்தூரில் உள்ள வீட்டில் இருந்து புறப்பட்ட அண்ணாமலையை அக்கரை அருகே போலீசார் கைது செய்தனர்.முன்னதாக போராட்டத்திற்கு புறப்பட்ட தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்ட தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.அண்ணாமலை மற்றும் பாஜக தலைவர்கள் கைதை கண்டித்தும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் தனியார் மண்டபத்தில் கைது செய்து தங்கவைக்கப்பட்ட அண்ணாமலை மாலை விடுவிக்கப்பட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “பாஜகவுக்கு மரியாதை கொடுக்காத காவல்துறை இனி தூங்கக்கூடாது. தமிழகத்தில் இனி விதவிதமாய் போராட்டங்கள் நடத்தப்படும். பெண்களை 6 மணிக்கு மேல் அடைத்து வைக்கக் கூடாது என்பது விதி ஆனால் எங்களிடம் காவல்துறை நடந்துகொண்ட விதம் கண்டிக்கத்தக்கது. காவல்துறைக்கு முன்னறிவிப்பின்றிதான் இனி பாஜக போராட்டம் நடத்தப்படும்.
அமைச்சர் ரகுபதிக்கு சவால்
போராட்டங்களுக்கு அனுமதி கோரி இதுவரை பாஜக அளித்த 7 கடிதங்களும் நிராகரிக்கப்பட்டுள்ளது. போராட்டங்களுக்கு முன் இனி அறிவிக்கவே போவதில்லை. ஒரு வாரத்திற்குள் 5,000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளில் பாஜக போராட்டம் நடத்தும். காவல்துறை இனி தூங்கக்கூடாது. மேலும், டாஸ்மாக் வழக்கில் முதலமைச்சரை A1 குற்றவாளி எனக்கூறிய எனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. தைரியம் இருந்தால் என்னை கைது செய்யுங்கள் என அமைச்சர் ரகுபதிக்கு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சவால் விடுத்தார்.
மேலும், தவெகவின் அரசியல் செயல்பாடு பள்ளிக் குழந்தைகள் போல இருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் பி-டீம் தான் விஜய் என்று திமுகவும், பாஜகவும் மறைமுக கூட்டணியில் இருந்து நாடகமாடுவதாக தவெகவின் குற்றச்சாட்டுக்கு அண்ணாமலை பதிலடி கொடுத்தார்.மேலும், படப்பிடிப்பில் நடிகைகளின் இடுப்பை கிள்ளிக்கொண்டு விஜய் அரசியல் செய்வதாகவும் அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்தார்.
What's Your Reaction?






