Ravikumar : பட்டியல் இனத்தவர்களை மூன்றாகப் பிரிக்கப் போகிறார்களா?.. ரவிக்குமார் அதிர்ச்சி

Ravikumar on Scheduled Caste Division : தமிழ்நாட்டில் உள்ள பட்டியலின பிரிவினரை இப்படி மூன்றாகப் பிரித்து ஒவ்வொரு பிரிவுக்கும் 6% என்று ஆக்கிவிடுவார்களோ என்ற அச்சம் எழுந்தது என்று விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் கூறியுள்ளார்.

Aug 12, 2024 - 11:56
Aug 13, 2024 - 09:37
 0
Ravikumar : பட்டியல் இனத்தவர்களை மூன்றாகப் பிரிக்கப் போகிறார்களா?.. ரவிக்குமார் அதிர்ச்சி
பட்டியலின பிரிவினரை இப்படி மூன்றாகப் பிரித்து விடுவார்களோ என ரவிக்குமார் அச்சம்

Ravikumar on Scheduled Caste Division : இது குறித்து தனது எக்ஸ் வலைப்பக்கத்தில் கூறியுள்ள ரவிக்குமார், “கடந்த வாரத்தில் ஒரு நாள் நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. தண்ணீர் குடிப்பதற்காக வெளியே வந்தேன். கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி அந்தப் பக்கமாக வந்து கொண்டிருந்தார். உச்ச நீதிமன்றம் அளித்த துணை வகைப்படுத்துதல் [Sub Categorisation] தீர்ப்பைப் பற்றி ஏன் இதுவரை காங்கிரஸ் கருத்து எதுவும் கூறவில்லை? என்று அவரிடம் கேட்டேன்.

“என்னிடமும் கேட்டார்கள். நான் இன்னும் அந்தத் தீர்ப்பைப் படிக்கவில்லை. நீங்கள் படித்திருந்தால் அதைப்பற்றி சொல்லுங்கள்” என்றார். அந்தத் தீர்ப்பின் சாராம்சமான விஷயங்களை அவரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். அப்போது அந்தப் பக்கமாக வந்த ஒன்றிய அமைச்சர் எல்.முருகன், “என்ன சீரியஸா பேசிக்கிட்டு இருக்கீங்க? என்று கேட்டார். “சப் கேட்டகரைசேஷன் [Sub Categorisation] தீர்ப்பைப் பற்றி ரவி விளக்கிக் கொண்டிருக்கிறார்” என்று ஜோதிமணி அவரிடம் சொன்னார்.

“தமிழ்நாடு அரசு இயற்றிய உள் ஒதுக்கீட்டுக்கான சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் சொல்லிவிட்டது. அவருக்கும் அது மகிழ்ச்சிதானே” என்று நான் சொன்னேன். “திமுக தான் எங்களை ஏமாத்திட்டாங்களே” என்றார் அவர். எனக்கு ஆச்சரியமாக இருந்தது.  “என்ன அப்படி சொல்றீங்க?“ என்று நான் கேட்டேன். “ஒதுக்கீடு கொடுத்துட்டு தகுதியானவங்க இல்லன்னா மத்தவங்கள வெச்சி நிரப்பிக்கிங்கன்னு ஆர்டர் போட்டுட்டாங்க. அப்புறம் ரிசர்வேஷன் கொடுத்து என்ன பிரயோஜனம்?” என்றார்.

“கடந்த 15 வருஷங்கள்ல அருந்ததியர் சமூக மக்கள் வேலையில சேர்வதற்கும், பதவி உயர்வு பெறுவதற்கும், எம்பிபிஎஸ் மாதிரி உயர் படிப்புகள்ல சேர்வதற்கும் இந்த ஒதுக்கீடு பெரிய அளவுல உதவியிருக்கே, அதப் போயி பிரயோஜனமில்லன்னு சொல்றீங்களே” என்று நான் கேட்டேன். “வெறும் 3% தானே கொடுத்து இருக்காங்க. 6% ல கொடுக்கணும்?“ என்றார்.

“6% எப்படி வரும்? 2011 சென்சஸ்லகூட 2.9% தானே மக்கள் தொகை வந்திருக்கு? என்று நான் கேட்டேன்.

“அது எப்படி? இருக்கிற 18 சதவீதத்தை மூன்றாக பிரித்து, அருந்தியிருக்கு 6% தேவேந்திர குல வேளாளருக்கு 6%  ஆதிதிராவிடருக்கு 6% என்று தானே கொடுக்கணும்? “ என்று கேட்டுவிட்டு அவர் போய்விட்டார்.

அதைக் கேட்டு நான் திகைத்துப் போனேன். “அவங்க அந்த அளவுக்கு இருக்க மாட்டாங்களா?” என்று ஜோதி மணியும் கேட்டார்.

“இல்லை” என்று சொன்னேன்.

“பட்டியலினத்தில் மூணு கேஸ்ட் தானே பெரிய கேஸ்ட்? “ என்று அவர் மீண்டும் கேட்டார். 

“ஆமாம், ஆனா பர்சன்டேஜ் வேறுபடும். அருந்ததியர் 2.9%, தேவேந்திர குல வேளாளர் 3.4%, ஆதிதிராவிடர், பறையர் சேர்த்து 12.71%“ என்று சொன்னேன். 

அப்படியா? என்று வியப்போடு அவர் கேட்டுக் கொண்டார். 

2011 ஆம் ஆண்டு சென்சஸில் தமிழ்நாட்டில் இருக்கும் பட்டியலின சாதிகளின் மக்கள் தொகையைப் பிரித்து ஏற்கனவே கிறிஸ்துதாஸ் காந்தி ஐஏஎஸ் அவர்கள் தயாரித்திருந்த அட்டவணை என்னிடம் இருந்தது. அதை போட்டோ காப்பி எடுத்து அடுத்த நாள் ஜோதி மணியிடம் ஒரு பிரதியைக் கொடுத்தேன்.

அமைச்சர் எல்.முருகன் அவர்கள் பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமானவர். ஒன்றிய பாஜக அரசின் கொள்கை முடிவுகளில் செல்வாக்கு செலுத்தக் கூடியவர். அவர் அப்படி சொன்னதை எதேச்சையாக சொன்ன ஒன்றாக என்னால் கருத முடியவில்லை. பாஜகவின் திட்டமாக அது இருக்குமோ? என்ற அச்சத்தை அது எனக்குள் எழுப்பி விட்டது. எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் உள்ள பட்டியலின பிரிவினரை இப்படி மூன்றாகப் பிரித்து ஒவ்வொரு பிரிவுக்கும் 6% என்று ஆக்கிவிடுவார்களோ என்ற அச்சம் எழுந்தது. 

திரு எல்.முருகன் கூறுவதைத் தமிழ்நாட்டில் பலரும் நம்பத்தான் செய்வார்கள். ஏனென்றால் பட்டியலினத்தில் உள்ள சாதிகளின் மக்கள் தொகை என்னவென்று எவருக்கும் தெரியாது. பட்டியலினத்தில்(Scheduled Castes) உள்ள சாதிகளை, ஒவ்வொரு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போதும் சாதிவாரியாகக் கணக்கெடுக்கிறார்கள் என்பது கூடப் பெரும்பாலோருக்குத் தெரியாது. 

பட்டியலினத்தில்(Scheduled Castes) உள்ள அருந்ததியர் (7 சாதிகள்)  தேவேந்திர குல வேளாளர் (7 சாதிகள்) பறையர் + ஆதிதிராவிடர் ஆகிய மூன்று பிரிவினரின் மக்கள் தொகை எவ்வளவு என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறவர்கள் சென்சஸ் ஆப் இந்தியா இணையதளத்தின் பின்வரும் இணைப்பில் சென்று அதை டவுன்லோடு செய்து தெரிந்து கொள்ளலாம்.

https://censusindia.gov.in/nada/index.php/catalog/2135/download/5212/SC-33-00-14-DDW-2011.XLS

அவ்வாறு டவுன்லோடு செய்ய முடியாதவர்கள் திரு கிறிஸ்துதாஸ் IAS Retd அவர்கள் சென்சஸ் விவரங்களைத் தொகுத்துத் தயாரித்த இந்த அட்டவணையில் அதைப் படித்துக்கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow