சிங்காரச் சென்னை பயண அட்டையை அறிமுகப்படுத்திய அமைச்சர் சிவசங்கர்
சிங்காரச் சென்னை பயண அட்டையை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்று அறிமுகப்படுத்தினார்.
மாநகரப் போக்குவரத்து கழகத்தில் பாரத் ஸ்டேட் வங்கியின் மூலம் சிங்காரச் சென்னை பயண அட்டையை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்று அறிமுகப்படுத்தினார். மாநகர் போக்குவரத்துக் கழக அனைத்துப் பேருந்துகளிலும் ஏற்கனவே சிங்கார சென்னை பயண அட்டையை பயன்படுத்தும் வகையில், ETM (Electronic Ticketing Machine) உபயோகத்தில் உள்ளது.
இந்நிலையில், இத்திட்டத்தின் முதற்கட்டமாக ஐம்பதாயிரம் அட்டைகள் SBI வங்கி மூலம் கட்டணமின்றி வழங்கப்படுகிறது. இந்த சிங்கார சென்னை பயண அட்டை கோயம்பேடு, பிராட்வே, சென்ட்ரல் ரயில் நிலையம், தாம்பரம், பூந்தமல்லி திருவான்மியூர், செங்குன்றம், வேளச்சேரி, கிண்டி, ஆவடி, தியாகராயநகர், அம்பத்தூர் தொழிற்பேட்டை, அம்பத்தூர் ஓ.டி, அடையாறு, அய்யப்பன்தாங்கல், கிளாம்பாக்கம், வடபழனி, ஸ்ரீபெரும்புதூர், பெரம்பூர், சைதாப்பேட்டை ஆகிய பேருந்து நிலையங்களில் உள்ள மாநகர் போக்குவரத்துக் கழக பயணச்சீட்டு விற்பனை மையங்களின் வாயிலாக வழங்கப்பட உள்ளது.
மேலும் கட்டணமின்றி வழங்கப்படும் இந்த அட்டைகளை, ரீசார்ஜ் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். ஆன்லைன் போர்ட்டல்கள், கைப்பேசி பயன்பாடுகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மாநகர் போக்குவரத்துக் கழக பயணச்சீட்டு விற்பனை மையங்கள் போன்ற பல்வேறு வழிகளில் இந்த அட்டையை எளிதாக ரீசார்ஜ் செய்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் இந்த சிங்கார சென்னை பயண அட்டையை பேருந்துகளில் நடத்துநர்களிடமும் ரீசார்ஜ் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில், மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ், தொ.மு.ச பேரவை தலைவர் சண்முகம், இணை மேலாண் இயக்குநர் செ.நடராஜன், பாரத ஸ்டேட் வங்கி உயர் அலுவலர்கள், மாநகர் போக்குவரத்துக் கழக பொது மேலாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் உயர் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
தொடர்ந்து, மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், செய்தியாளர்களிடம் பேசியதாவது, மாநகரப் பேருந்துகளில் கடந்த ஆண்டு எலக்ட்ரானிக் மிஷின் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது 99 சதவீதம் மாநகரப் பேருந்துகளில் எலக்ட்ரானிக் மிஷின் மூலம் டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் நடத்துனர்கள் சுமை குறைந்துள்ளது என்றார்.
மேலும், 1.6 சதவீதம் யு.பி.ஐ மற்றும் கிரெடிட் கார்டு மூலம் பணப்பரிவர்த்தனை நடைபெற்று வருகிறது. சிங்கார சென்னை மெட்ரோ அட்டை கார்டு வைத்துள்ளவர்கள், மாநகரப் பேருந்துகளில் இனி அந்த அட்டையை வைத்து பயணம் செய்து கொள்ளலாம். இந்தியாவில் உள்ள அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் பயன்படுத்தும் வகையில், சிங்கார சென்னை அட்டையை வைத்து பயணம் மேற்கொள்ளலாம் என்று கூறினார்.
What's Your Reaction?