இந்திய பன்னாட்டு திரைப்பட விழா காவி திரைப்படவிழாவாக மாறியுள்ளது... உலக சினிமா பாஸ்கரன் வருத்தம்!
உலக நாடுகளில் போற்றப்படும் தனது படம் இந்திய பன்னாட்டு திரைப்பட விழாவில் ஏற்றுக்கொள்ளபட வில்லை என கொட்டுகாளி திரைப்படத்தின் இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் வருத்தம் தெரிவித்ததாக உலக சினிமா பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த உலக சினிமா பாஸ்கரன், "இந்திய பன்னாட்டு திரைப்படவிழா 1952-ம் ஆண்டு இந்திய ஒன்றிய தலைமை அமைச்சர் ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்டது. இவ்விழா இந்திய ஒன்றிய அரசின் தகவல் ஒலிப்பரப்பு துறை அமைச்சகத்தின் கீழ் இயக்கப்படுகிறது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இவ்விழா நேர்மையாகவும், கட்டற்ற சுதந்திரத்துடனும் செயல்பட்டது. இடது சாரி படைப்பாளிகள் நடுவர்களாகவும், விருதுகள் பெரும் வகையிலும் இவ்விழா செயல்பட்டது. 2014 ம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இந்த நிலைமை தலைகீழானது. இப்போது முழுக்க காவி திரைப்படவிழா போன்று செயல்படுகிறது.
காஷ்மீர் பைல்ஸ், பாகுபலி போன்ற வலதுசாரி திரைப்படங்கள் திரையிடப்பட்டு பெரும் கண்டனத்திற்கு உள்ளாகியது. இந்த ஆண்டு இந்தியன் பனோரமா பிரிவில் தேர்வு செய்யப்பட்ட அனைத்து படங்களும் தரமற்ற படங்கள். வீரசாவர்க்கர் போன்ற தரமற்ற திரைப்படம் இவ்விழாவின் தொடக்கவிழா திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு வரலாற்று தவறு. உலகெங்கும் 20,000-த்திற்கும் மேற்பட்ட திரைப்பட விழாக்கள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதில் புகழ்வாய்ந்த திரைப்பட விழாக்கள் வரிசையில் ஜெர்மனி நாட்டில் நடக்கும் பெர்லின் திரைப்பட விழா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. 100- ஆண்டு தமிழ் சினிமா வரலாற்றில் இவ்விழாவில் ஒரு தமிழ் திரைப்படம் கூட தேர்வு செய்யப்பட்டது கிடையாது. இந்த ஆண்டு கொட்டுக்காளி என்ற தமிழ் திரைப்படம் முதன் முதலாக இவ்விழாவில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்ல ஸ்பெயின் நாட்டில் 67- வருடங்களாக நடைபெறும் சிமென்சி என்ற திரைப்பட விழாவிலும் கொட்டுக்காளி தேர்வு செய்யப்பட்டு திரையிடப்பட்டு வருகிறது. இதன் இயக்குநர் P.S. வினோத்ராஜ் தனது திரைப்படம் இந்திய பன்னாட்டு திரைப்பட விழாவில் தேர்வு செய்யப்படாதது குறித்து மிகவும் கவலை தெரிவித்தார். கோழிப்பண்ணை செல்லத்துரை என்ற தமிழ் திரைப்படம் 25 ஆண்டுகளை கடந்து நடைபெற்று வரும் 3 அமெரிக்க திரைப்பட விழாக்களில் தேர்வு செய்யப்பட்டு பலத்த வரவேற்பை பெற்றது. இந்த படமும் இந்திய திரைப்பட விழாவிற்கு விண்ணப்பித்து தேர்வு செய்யப்படவில்லை. இதைப் போன்று உலக சினிமா தரத்தில் உருவான வாழை, ஜமா, வெள்ளக்குதிரை போன்ற தமிழ் திரைப்படங்களும் விண்ணப்பித்து ஏமாற்றத்தை அடைந்துள்ளது.
இத்தகைய சீரழிவிற்கு காரணம் சிறந்த படைப்பாளிகள் தேர்வு குழுவிலும், நடுவர் குழுவிலும் பாஜக ஆட்சி காலத்தில் தேர்வு செய்யப்படாதது மட்டுமே. அதுமட்டுமல்ல ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களுக்கு விருப்பமான நெருக்கமான படங்களையும், இயக்குநர்களையும், நடிகர்களையும் இந்திய பன்னாட்டு திரைப்பட விழாவில் கௌரவிப்பதை தொடர்ச்சியாக செய்து வருகிறார்கள். பன்னாட்டு பார்வையாளர்கள், நடுவர்கள் இந்த போக்கைக் கண்டித்து எதிர்ப்பு தெரிவித்தாலும் ஆட்சியாளர்கள் பொருட்படுத்துவது கிடையாது. இத்தகைய அராஜக போக்கை நான் கண்டிக்கிறேன்” என்று கூறினார்.
What's Your Reaction?






