12 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா மோசம்... நியூசிலாந்து அணி சாதனை வெற்றி
இந்திய அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, டாம் லாதம் தலைமையில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 16ஆம் தேதி தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
2ஆவது டெஸ்ட் போட்டி கடந்த 24ஆம் தேதி புனேவில் தொடங்கி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் டாம் லாதம் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 259 ரன்கள் எடுத்தது.
அதிகப்பட்சமாக டெவன் கான்வே 76 ரன்களும், ரச்சின் ரவீந்திரா 65 ரன்களும், மிட்செல் சாண்ட்னர் 33 ரன்களும் எடுத்தனர். தொடக்க வீரர்களான டாம் லாதம், டெவன் கான்வே, வில் யங் மூவரையும் ரவிச்சந்திர அஸ்வின் வெளியேற்றினார். மீதமுள்ள 7 வீரர்களையும் வாஷிங்டன் சுந்தர் காலி செய்தார்.
பின்னர் களமிறங்கிய இந்திய அணியில் முக்கிய வீரர்களான ரோஹித் சர்மா டக் அவுட் ஆகியும், விராட் கோலி 1 ரன்னிலும், வெளியேறினர். யஷ்ஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் தலா 30 ரன்கள் எடுத்தனர். அதிகப்பட்சமாக ரவீந்திர ஜடேஜா 38 ரன்கள் எடுத்தார். இதனால், இந்திய அணி 156 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
அபாரமாக பந்துவீசிய நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சாண்ட்னர் 7 விக்கெட்டுகளை கைப்பற்றி சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார். இதற்கு முன்னதாக ஒரு இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளையும், ஒரு போட்டியில் 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தியதே சிறந்த பந்துவீச்சாக அமைந்தது.
பின்னர், 103 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 255 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் டாம் லாதம் 86 ரன்களும், கிளென் பிலிப்ஸ் 48 ரன்களும், டாம் பண்டல் 41 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், அஸ்வின் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
பின்னர், 358 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 245 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அதிகப்பட்சமாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் 77 ரன்களையும், ஜடேஜா 42 ரன்களையும், சுப்மன் கில் 23 ரன்களையும் எடுத்தனர்.
முதல் இன்னிங்ஸை போலவே 2ஆவது இன்னிங்ஸிலும் நியூசி. வீரர் மிட்செல் சாண்ட்னர் விக்கெட்டுகளை அள்ளினார். அவர், இந்திய அணியின் தொடக்க வீரர்கள் 6 பேரையும் சாய்த்து அசத்தினார். முதல் இன்னிங்ஸில் டக்-அவுட் ஆன ரோஹித் சர்மா, 2ஆவது இன்னிங்ஸில் 8 ரன்களில் வெளியேறினார். ரிஷப் பண்ட் தேவையில்லாமல் ரன் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.
இதன் மூலம் நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 2012ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அணி சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்துள்ளது. மேலும், நியூசிலாந்து அணி முதன் முறையாக இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றுள்ளது.
இந்த தோல்வியின் மூலம் இந்திய அணி, சொந்த மண்ணில் பெற்றுவந்த 18 தொடர் வெற்றிகளுக்கு முடிவுகட்டியுள்ளது நியூசிலாந்து அணி. இதற்கு முன்னதாக, இங்கிலாந்து அணி 2012ஆம் ஆண்டில் 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி இருந்தது. 3ஆவது டெஸ்ட் போட்டி நவம்பர் 1ஆம் தேதி தொடங்கி 05ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது.
What's Your Reaction?