மகா விஷ்ணு விவகாரம்: கல்வித்துறை செயலாளரிடம் இன்று அறிக்கை தாக்கல்.. அடுத்தது என்ன?
மகா விஷ்ணு பள்ளியில் பேசுவது தொடர்பாக தலைமை ஆசிரியர்கள் தங்களிடம் அனுமதி பெறவில்லை என்று தென் சென்னை மாவட்ட கல்வி அலுவலர் சரஸ்வதி மற்றும் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை: சென்னையில் உள்ள அரசுப் பள்ளியில் மகா விஷ்ணு என்ற நபர் ஆன்மிகச் சொற்பொழிவு நடத்தினார். மேலும் பாவம், புண்ணியம், மறுஜென்மம் போன்ற மூடநம்பிக்கை தொடர்பான கருத்தை மாணவர்களிடம் பேசியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாற்றுத்திறனாளி ஆசிரியரிடமும் அவர் மிக கடுமையாக நடந்து கொண்ட வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகின.
அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பிய மகா விஷ்ணுவை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சைதாப்பேட்டை மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகசுந்தரம் மற்றும் அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசி ஆகியோர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டனர்.
இந்த விவகாரம் பெரிதாக வெடித்த நிலையில், ''தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் சிறுபான்மையினர் நலப் பள்ளிகள் ஆகியவற்றில் ஆன்மீகம் மதம் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது'' என்று தமிழ்நாடு அரசு அதிரடியாக உத்தரவிட்டது. இதற்கிடையே மகா விஷ்ணு விவகாரத்தில் என்ன நடந்தது? என்பது குறித்து தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் கடந்த 3 நாட்களாக விரிவாக விசாரணை நடத்தி வருகிறார்.
இதில் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் மட்டும் இல்லாமல், தென் சென்னை மாவட்ட கல்வி அலுவலர் சரஸ்வதி மற்றும் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் ஆகியோரிடமும் அவர் விசாரணை நடத்தியுள்ளார். அப்போது இரண்டு அலுவலர்களுமே, மகா விஷ்ணு பள்ளியில் பேசுவது தொடர்பாக தலைமை ஆசிரியர்கள் தங்களிடம் அனுமதி பெறவில்லை என்று தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதேபோல் அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த பள்ளி நிர்வாக குழு உறுப்பினர்கள், மகா விஷ்ணு பேசுவதற்கு தாங்கள் எந்த ஏற்பாடும் செய்யவில்லை என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
இந்நிலையில், பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் தனது விசாரணை அறிக்கையை பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மதுமதியிடம் இன்று சமர்ப்பிக்க உள்ளார். இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் அடிப்படையில் மகா விஷ்ணு விவகாரத்தில் துறைரீதியாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பள்ளி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
What's Your Reaction?






