காங்கிரஸின் இருண்ட வரலாறு அம்பலம்.. அமித்ஷாவிற்கு மோடி ஆதரவு

அம்பேத்கர் குறித்து அமித்ஷா சர்ச்சை கருத்து பேசிய நிலையில் அவருக்கு ஆதரவு தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளப் பக்கத்தில் பதிவுகளை பகிர்ந்துள்ளார்.

Dec 18, 2024 - 17:26
 0
காங்கிரஸின் இருண்ட வரலாறு அம்பலம்.. அமித்ஷாவிற்கு மோடி ஆதரவு
நரேந்திர மோடி-அமித்ஷா

மாநிலங்களவையில் நேற்று அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 'அம்பேத்கர்.. அம்பேத்கர்’ என முழக்கமிடுவது தற்போது ஃபேஷன் (Fashion) ஆகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை பலமுறை உச்சரித்திருந்தால் சொர்க்கத்திலாவது அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும் என்று பேசினார். அமித்ஷாவின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமித்ஷாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா கூட்டணி எம்.பிக்கள் நாடாளுமன்றத்தை முடக்கினர்.  நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பாகவே போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அம்பேத்கரின் புகைப்படம் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி அமித்ஷாவை மன்னிப்பு கேட்க கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில்,  மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி, திமுக எம்.பி டி.ஆர் பாலு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அமித்ஷாவின் இந்த சர்ச்சை கருத்திற்கு டெல்லியில் முதல் தமிழ்நாடு வரை எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.

இந்நிலையில், அமித்ஷாவிற்கு ஆதரவு தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், அம்பேத்கருடன் தொடர்புடைய ஐந்து முக்கிய இடங்களான பஞ்சதீர்த்தத்தை மேம்படுத்த எங்கள் அரசாங்கம் உழைத்துள்ளது. பல தசாப்தங்களாக சைத்ய பூமிக்கான நிலம் தொடர்பான பிரச்சினை நிலுவையில் உள்ளது. எங்கள் அரசு அந்த பிரச்சினையை தீர்த்தது. அம்பேத்கர் தனது கடைசி ஆண்டுகளை கழித்த டெல்லியில் உள்ள 26, அலிபூர் சாலையையும் நாங்கள் மேம்படுத்தி உள்ளோம்.

லண்டனில் அவர் வசித்த வீடும் அரசால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த பத்தாண்டுகளாக அம்பேத்கரின் தொலைநோக்கு பார்வையை நிறைவேற்ற பாஜக அரசு அயராது உழைத்துள்ளது. 25 கோடி மக்களை வறுமையில் இருந்து அகற்றுவது, எஸ்.சி/எஸ்.டி. சட்டத்தை வலுப்படுத்துவது, ஸ்வச் பாரத், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா, ஜல் ஜீவன் மிஷன், உஜ்வாலா யோஜனா போன்ற பாஜக அரசின் முதன்மை திட்டங்கள் எதுவாக இருந்தாலும், அவை ஒவ்வொன்றும் ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை தொட்டவை. 

அம்பேத்கரை அவமதித்த மற்றும் எஸ்.சி, எஸ்.டி. சமூகங்களை புறக்கணித்த காங்கிரசின் இருண்ட வரலாற்றையை அமித்ஷா அம்பலப்படுத்தினார். அவர் முன்வைத்த உண்மைகளால் காங்கிரஸார் திகைத்து விட்டார்கள். அதனால்தான் அவர்கள் இப்போது நாடகங்களில் ஈடுபடுகிறார்கள். ஆனால் மக்களுக்கு உண்மை தெரியும். காங்கிரஸ்  பல ஆண்டுகளாக ஆட்சியில் அமர்ந்திருந்தாலும், எஸ்.சி., எஸ்.டி. சமூகங்களுக்கு அதிகாரம் அளிக்க எந்த ஒரு விஷயத்தையும் செய்யவில்லை. அந்த சமூகங்களுக்கு எதிரான மிக மோசமான படுகொலைகள் அவர்களின் ஆட்சியில் நடந்துள்ளன என்பதை அவர்களால் மறுக்க முடியாது.

அம்பேத்கரை நோக்கி காங்கிரஸ் செய்த பாவங்களின் பட்டியல்:

அவரை ஒரு முறை அல்ல இரண்டு முறை தேர்தலில் தோற்கடித்தது. பண்டிட் நேரு அவருக்கு எதிராக பிரசாரம் செய்து அவரது தோல்வியை கவுரவ பிரச்சினையாக ஆக்கினார். அவருக்கு பாரத ரத்னா மறுப்பு. பாராளுமன்றத்தின் மைய மண்டபத்தில் அவரது உருவப்படம் பெருமைக்குரிய இடத்தில் வைக்க மறுப்பு.

காங்கிரஸ் தீங்கிழைக்கும் அதன் பொய்களால் பல வருடங்களாக தங்களின் தவறான செயல்களை, அம்பேத்கரை அவமதித்ததை மறைக்க முடியும் என்று நினைத்தால், அது தவறு. அம்பேத்கரின் பாரம்பரியத்தை அழிக்கவும், எஸ்.சி. மற்றும் எஸ்.டி. சமூகங்களை அவமானப்படுத்தவும், ஒரு வம்சத்தின் தலைமையில் ஒரு கட்சி எப்படி எல்லாவிதமான கேடுகெட்ட தந்திரங்களிலும் ஈடுபட்டது என்பதை இந்திய மக்கள் மீண்டும் மீண்டும் பார்த்திருக்கிறார்கள் என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow