நாடாளுமன்றத்தில் தள்ளு முள்ளு.. பாஜக எம்.பி காயம்.. ராகுல் காந்தி மீது குற்றச்சாட்டு
நாடாளுமன்றத்தில் காங்கிரஸாருக்கும் பாஜகவிற்கும் ஏற்பட்ட தள்ளு முள்ளில் பாஜக எம்.பி பிரதாப் சாரங்கி தலையில் காயம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று முன்தினம் மாநிலங்களவையில் அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 'அம்பேத்கர்.. அம்பேத்கர்’ என முழக்கமிடுவது தற்போது ஃபேஷன் (Fashion) ஆகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை பலமுறை உச்சரித்திருந்தால் சொர்க்கத்திலாவது அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும் என்று பேசினார். அமித்ஷாவின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமித்ஷாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா கூட்டணி எம்.பிக்கள் நாடாளுமன்றத்தை முடக்கினர். நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பாகவே போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அம்பேத்கரின் புகைப்படம் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி அமித்ஷாவை மன்னிப்பு கேட்க கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதுமட்டுமல்லாமல், டெல்லி முதல் தமிழ்நாடு வரை அமித்ஷாவிற்கு எதிராக பலர் எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், அமித்ஷாவை பதவி விலக கோரி நாடாளுமன்ற வளாகத்தில் இன்று ராகுல் காந்தி தலைமையில் பேரணி நடைபெற்றது. அம்பேத்கர் சிலையில் இருந்து மகர் திவார் வரை பேரணியாக வந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தின் உள்ளே செல்ல முயன்றனர். அப்போது, இதற்கு போட்டியாக நுழைவு வாயிலில் பாஜக எம்.பிக்கள் போராட்டம் நடத்தினர். இது தள்ளுமுள்ளாக மாறியது. இதில், பாஜக எம்.பி பிரதாப் சாரங்கி கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்ட சக உறுப்பினர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது ராகுல் காந்தி தள்ளிய ஒரு எம்.பி. தன் மீது விழுந்ததில் தனக்கு காயம் ஏற்பட்டதாக பிரதார் சாரங்கி தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து ராகுல் காந்தி கூறியதாவது, நான் நாடாளுமன்ற வாயில் வழியாக உள்ளே செல்ல முயன்றேன். அப்போது பாஜக எம்.பிக்கள் என்னை வழிமறித்து தள்ளியதால் இச்சம்பவம் நடந்தது என்று தெரிவித்துள்ளார். உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பதவி விலக கோரி காங்கிரஸ் வலியுறுத்தி வரும் நிலையில், அமித்ஷாவிற்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி உட்பட பாஜக தலைவர்கள் பலர் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டு வருகின்றனர்.
What's Your Reaction?