டேராடூன்: உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இந்தியா விளங்கி வருகிறது. இந்தியாவில் அனைத்து அனைத்து மதங்களை சேர்ந்தவர்களும், பல்வேறு தரப்பட்ட மொழிகள் பேசுவபவர்களும் அண்ணன்-தம்பிகளாக பழகி வருகின்றனர். ஆனால் நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும் முயற்சியில் ஒரு சில நபர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
அப்படி ஒரு சம்பவம்தான் உத்தராகண்ட் மாநிலத்தில் நடந்துள்ளது. இந்த மாநிலத்தில் உள்ள ருத்ரபிரயாக் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் 'இந்துக்கள் அல்லாதவர்கள் உள்ளே நுழையக்கூடாது' என்ற பலகைகள் வைக்கப்படுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது பல்வேறு கிராமங்களின் நுழைவு வாயில் அருகே வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகைகளில், ''எச்சரிக்கை: இந்துக்கள் அல்லாதவர்கள், ரோஹிங்கியா முஸ்லிம்கள் மற்றும் வியாபாரிகள் கிராமங்களில் நுழையவும், நடமாடவும் தடை விதிக்கப்படுகிறது. அப்படி இவர்களால் யாரேனும் கிராமங்களுக்குள் கண்டறியப்பட்டால் அது தண்டனைக்குரிய குற்றமாகும். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இப்படிக்கு அனைத்து கிராம சபை, ருத்ரபிரயாக் மாவட்டம்'' என்று இந்தியில் எழுதப்பட்டுள்ளது.
இந்த சர்ச்சைக்குரிய அறிவிப்பு பலகைகள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. கடந்த வாரம் உத்தராகண்ட்டின் சாமோலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சலூன் கடையில் இந்து மதத்தை சேர்ந்த ஒரு சிறுமியிடம், மற்றொரு சமூகத்தை சேர்ந்த ஒருவர் ஆபாசமாக நடந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள் சலூன் கடையை அடித்து நொறுக்கினார்கள்.
இந்த சம்பவத்தை தொடர்ந்துதான் இப்போது பல்வேறு கிராமங்களில் சர்ச்சைக்குரிய அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இது குறித்து மாவட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் ருத்ரபிரயாக் மாவட்ட கிராமங்களுக்கு சென்ற போலீசார், சர்ச்சைக்குரிய அறிவிப்பு பலகைகள் அனைத்தையும் அகற்றினார்கள். இனிமேல் இதுபோல் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்களிடம் எச்சரிக்கை விடுத்தனர்.
இதற்கிடையே சர்ச்சைக்குரிய அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்ட விவகாரம் சமூகவலைத்தளங்களில் கொழுந்து விட்டு எரிகிறது. ''பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடப்பது வேதனையளிக்கின்றன. பல்வேறு மாநிலங்களில் மாட்டிறைச்சி கொண்டு செல்லும் நபர்கள் அடித்துக் கொல்லப்பட்டு வருகின்றனர். நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும் நபர்கள் மீது உடனுக்குடன் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற சம்பவங்களை நிரந்தரமாக தடுத்து நிறுத்த முடியும்'' என்று பல்வேறு தரப்பினரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.