அண்ணா பல்கலைக்கழக விவகாரம்.. வலுக்கும் போராட்டம்.. அதிமுகவினர் கைது

சென்னை அண்ணா பல்கலைக்கழக சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற அதிமுகவினரை போலீஸார் கைது செய்தனர்.

Jan 6, 2025 - 08:48
Jan 6, 2025 - 08:52
 0
அண்ணா பல்கலைக்கழக விவகாரம்.. வலுக்கும் போராட்டம்.. அதிமுகவினர் கைது
போராட்டத்தில் ஈடுபட முயன்ற அதிமுகவினரை போலீஸார் கைது செய்தனர்

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும், இச்சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் சிறப்பு புலனாய்வு குழுவினர் மாணவியிடம் மேற்கொண்ட விசாரணையில் சார் ஒருவரிடம் ஞானசேகரன் பேசியதை உறுதிப்படுத்தியதாக தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து, ‘யார் அந்த சார்’ என பல கட்சி தலைவர்களும் கேள்வி எழுப்பி வந்தனர். அதுமட்டுமல்லாமல், குற்றவாளிகளை பாதுகாக்க திமுக முயல்வதாக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழிசை செளந்தராஜன், குஷ்பு உட்பட பலர் குற்றம்சாட்டினர். அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக பாஜக மகளிர் அணி சார்பில் ஆளுநரிடம் மனு கொடுக்கப்பட்டது. 

தொடர்ந்து, சார் ஒருவரிடம் ஞானசேகரன் பேசியதாக மாணவி சிறப்பு புலனாய்வு குழுவிடம் உறுதி செய்ததாக பரவி வரும் தகவல் வதந்தி என்றும் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை பற்றிய இத்தகையை ஆதாரமற்ற மற்றும் ஊகத்தின் அடிப்படையிலான தகவல்கள்,  பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதுடன்,  இவ்வழக்குகளில் சுதந்திரமான மற்றும் நியாயமான விசாரணையையும் பாதிக்கக் கூடும் என்றும் காவல்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. 

மேலும், பாதிக்கப்பட்ட மாணவியின் வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து குற்றவாளி  ஞானசேகரனின் வீட்டில் சிறப்பு புலனாய்வு குழுவினர் சோதனை மேற்கொண்டனர். இதில்,  சொத்து ஆவணங்கள், பட்டா கத்தி, ஹார்ட் டிஸ்க், பென் டிரைவ் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க மற்றொரு புறம் அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக பல்வேறு கட்சி தலைவர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 இதன் ஒரு பகுதியாக இன்று காலை அதிமுக மாணவர் அணி செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் தலைமையில் அக்கட்சியினர் " மாணவர்களுக்காக மாணவர்களாய் ஒன்றிணைவோம்"  என்ற கருத்தை வலியுறுத்தி பல்கலைக்கழகம் வெளியே போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது காவல்துறையினருக்கும், அதிமுக மாணவர் அணியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற அதிமுகவினரை போலீசார் கைது செய்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow