குற்றத்தை மூடி மறைக்கும் திமுக.. நியாயம் கொடுப்பதில் அரசு உறுதியாக இருக்க வேண்டும்- எல்.முருகன்
அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் திமுக அரசு குற்றத்தை மூடி மறைப்பதில் தான் கவனமாக இருக்கிறார்கள் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை தியாகராய நகர் பகுதியில் அமைந்துள்ள சர்.பிடி. தியாகராயர் கலையரங்கில் நடைபெறும், சென்னை கார் வியாபாரிகள் சங்கத்தின் 9 -ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சியில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு உரையாற்றினர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவம் நமக்கெல்லாம் அவமானத்தை கொடுக்க கூடிய ஒரு செயல். திமுக அரசு குற்றத்தை மூடி மறைப்பதில் தான் கவனமாக இருக்கிறார்கள். குற்றத்தில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பது தான் தமிழக காவல்துறையின் கடமை. ஆனால் தமிழக காவல்துறை அதில் இருந்து தவறி உள்ளது.
விசாரணை நடந்துக் கொண்டிருக்கும் போதே காவல்துறை தரப்பில் இந்த வழக்கில் ஒருவர்தான் குற்றவாளி என சொல்லப்படுகிறது. வேறு யாரும் இல்லை என்று விளக்கமளிக்கிறார்கள். மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் மேலும் ஒருவர் சம்பந்தப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நியாயம் கொடுப்பதில் அரசாங்கம் உறுதியாக இருக்க வேண்டும். ஆனால், அதை தவிர்த்து பாதிக்கப்பட்டவரின் விவரத்தை வெளியிடுகின்றனர்.
காவல்துறையின் அஜாக்கிரதையால் தான் முதல் தகவல் அறிக்கை (FIR) வெளியானது. இது சட்டப்படி குற்றம். இதற்கு காரணம் காவல்துறையின் அஜாக்கிரதை, கவனமின்மை, வழக்கை எப்படி கையாள வேண்டும் என்கிற தெளிவின்மையே காரணம். பாதிக்கப்பட்டவர்களை பாதுக்காக்க திராணியற்ற அரசாக தமிழக அரசு உள்ளது.
அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் எனவும் குற்றவாளிகள் யாராக இருந்தாலும், இந்த குற்றத்தில் பின்னணியில் இருப்பவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்பது தான் பாஜக பணியாக இருந்து வருகிறது.
திமுக அரசு எந்தளவுக்கு ஒரு குற்றத்தை மூடி மறைக்க பார்க்கிறார்கள் என்பதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கொடுக்க கூட திமுக அரசு தயாராக இல்லை என்பதும் கூட்டணி கட்சிகளின் குரலில் தெரிகிறது. தமிழ்நாடு அரசு உடனடியாக குற்றத்தின் பின்னணியில் உள்ளவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
முன்னதாக நிகழ்ச்சி மேடையில் பேசிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பிரதமர் மோடி பதவியேற்ற 10 ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சி அதிவேகமாக உள்ளது. தேசிய அதிவிரைவு சாலைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. நாட்டின் முகத்தையே பிரதமர் மோடி மாற்றி காட்டி உள்ளார்.
2014-ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்தியாவின் பொருளாதாரம் 11-ஆவது இடத்தில் இருந்தது. தற்போது, இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளி 5-வது இடத்துக்கு முன்னேறி உள்ளோம். 2047-ல் உலகத்துக்கே வழிகாட்டியாக இந்தியா திகழும். ஒவ்வொரு பட்ஜெட்டிலும் அடிப்படை உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்படுகிறது.
நாட்டின் வளர்ச்சியின் வேகத்தில் பொருளாதாரத்தின் பங்கு முக்கியமானது. அதில், வியாபாரிகளின் பங்கும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் பொருளாதாரம் முன்னேற்றத்தில் செல்வதற்கு மக்கள், வியாபாரிகளிடம் சேமிப்பு பழக்கம் முக்கியமானது. அதனை பிரதமர் மோடி பல்வேறு வழிகளில் முன்னெடுக்கிறார்.
இந்தியா மிகவேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. ஒருகாலத்தில் கார்கள் இறக்குமதி செய்த இந்தியா தற்போது கார்களை ஏற்றுமதி செய்து வருகிறோம். 90 சதவீதம் ஆப்பிள் ஐபோன்கள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 2047-ல் இந்தியா உலகத்திற்கு வழிகாட்டியாகவும், வல்லரசாகவும் இருக்கும் எனத் தெரிவித்தார்.
What's Your Reaction?