Savukku Shankar : சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து.. உச்சநீதிமன்றம் அதிரடி!

Savukku Shankar Case Update : இந்த வழக்கு தொடர்ந்து நடந்து வந்த நிலையில், ஜாமீன் வழங்கிய பிறகும் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது ஏன்? என நீதிபதிகள் தமிழ்நாடு காவல் துறைக்கு சரமாரியாக கேள்வி எழுப்பி இருந்தனர். சவுக்கு சங்கர் மீதான வழக்குகள் தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.

Sep 25, 2024 - 16:34
Sep 25, 2024 - 16:46
 0
Savukku Shankar : சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து.. உச்சநீதிமன்றம் அதிரடி!
Savukku Shankar Case Update

Savukku Shankar Case Update : தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்களை ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசியதாக பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து சவுக்கு சங்கர் மீது 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதாவது கன்னியாகுமரி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, திருச்சி, சென்னை உள்பட பல இடங்களில் உள்ள காவல் நிலையங்களில் சவுக்கு சங்கர் மீது வழக்குகள் பாய்ந்தன. 

சவுக்கு சங்கர் மீதான வழக்குகள் உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மற்ற மாவட்ட நீதிமன்றங்களில் நடந்து வருகிறது. மேற்கண்ட 16 வழக்குகளில் 12 வழக்குகளில்  சவுக்கு சங்கருக்கு ஜாமீன் கிடைத்து விட்டது. இதற்கிடையே சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது. இதனை எதிர்த்து அவரது தாய் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்போது சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். 12 வழக்குகளில் ஜாமீன் கிடைத்து விட்டதால், மீதியுள்ள வழக்குகளிலும் ஜாமீன் கிடைத்து சவுக்கு சங்கர் சிறையில் இருந்து வெளியே வந்து விடுவார் என தகவல் வெளியானது.

ஆனால் சவுக்கு சங்கர்(Savukku Shankar Case) மீது மீண்டும் ஒரு குண்டர் சட்டம் பாய்ந்தது. வாகனத்தில் அவர் 2 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா வைத்திருந்ததாக தேனி மாவட்ட போலீசார் குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் அடைத்தது தொடர்பாக அவரது தாயார் உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். 

இந்த வழக்கு தொடர்ந்து நடந்து வந்த நிலையில், ஜாமீன் வழங்கிய பிறகும் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது ஏன்? என நீதிபதிகள் தமிழ்நாடு காவல் துறைக்கு சரமாரியாக கேள்வி எழுப்பி இருந்தனர். சவுக்கு சங்கர் மீதான வழக்குகள் தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது  சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யும்படி அவரது தரப்பில் வாதிடப்பட்டது. அப்போது தமிழ்நாடு அரசு சார்பில், வழக்கு விசாரணையின்போது சவுக்கு சங்கர் மீதான குண்டாஸ் சட்டம் திரும்ப பெற்றுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. 

தமிழ்நாடு அரசின் விளக்கத்தை ஏற்ற உச்சநீதிமன்றம், சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ததுடன், அவரது தாய் தொடர்ந்த வழக்கையும் முடித்து வைத்தது. மேலும் வேறு வழக்குகள் நிலுவையில் இல்லை என்றால் சவுக்கு சங்கரை ஜாமீனில் விடுவிக்கவும் காவல் துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow