கொசுவை பிடித்து கொடுத்தால் காசு! வினோத Job Offer... ’பொழச்சுப்பீங்கடா.. பொழச்சுப்பீங்க!’
பிலிபைன்ஸ் நாட்டில் கொசுவை பிடித்து கொடுத்தால் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள இந்த புதுவித வேலைவாய்ப்பு உலகம் முழுவதும் பேசு பொருளாகியுள்ளது. இந்த வினோதமான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டது ஏன்? இதன் பின்னணியில் உள்ள காரணம் என்ன? இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

உலகின் பல்வேறு நாடுகளில் இரண்டு மூன்று பட்டப்படிப்புகள் படித்தவர்களே வேலையில்லா திண்டாட்டத்தால் அவதியுற்று வருகின்றனர். ஆனால், ஒரு டிகிரியும் வேண்டாம், எழுத படிக்க கூட தெரிய வேண்டாம் என ஒரு வினோதமான Job Offer குறித்து பிலிபைன்சில் உள்ள ஒரு கிராமம் அறிவித்துள்ளது.
அதுவும் பட்டுன்னு அடிச்சா பொட்டுன்னு போயிடும்னு மாரி பட டயலாக் போல, ஒரு அடி அடித்தால் இறந்துவிடும் கொசுக்களை பிடித்து தருவரோருக்கு சன்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, கொசுவை உயிரோடோ அல்லது உயிரில்லாமலோ பிடித்து கொடுத்தால் சன்மானம் வழங்கப்படும் என்ற அறிவிப்பே அது. இந்தியா உள்பட உலகம் எங்கும் கொசு தொல்லை இருந்துவருகிறது. இதனால் மலேரியா, டெங்கு போன்ற பல நோய் தொற்றுக்கள் ஏற்படுகின்றது. இதனால் பல அரசுகள் இந்த கொசுக்களை ஒழிக்க பல நடவடிக்கைகளே மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் பிலிப்பைன்ஸில் கொசு தொல்லை அதிகமாக இருந்ததால் அங்கு டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவத் தொடங்கியிருக்கிறது.
குறிப்பாக பிலிப்பைன்ஸ் மண்டலியோங் நகரில் அடிஷன் மலை கிராமத்தில் கடந்த இரண்டு மாதங்களில் சுமார் 42 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டனர். டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 2 மாணவர்கள் உயிரிழந்த நிலையில், இது அந்த நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியது.
இதனால் கொசுவை அழிக்க திட்டமிட்ட அந்த கிராமத்தின் தலைவர் யாரெல்லாம் உயிருடனோ, அல்லது உயிரில்லாமல் கொசுக்களைப் பிடித்து கொடுக்கிறார்களோ, அவர்களுக்கு சன்மானம் அறிவித்துள்ளார். ஒருவர் 5 கொசுக்ளை பிடித்துக் கொடுத்தால் அவருக்கு இந்திய மதிப்பில் ஒரு ரூபாய் 50 காசுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் தீவிரமாக கொசுவை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 21 பேர் மொத்தம் 700 கொசுக்களை பிடித்துக்கொடுத்து சன்மானம் பெற்றுச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படி ஒரு அறிவிப்பால தாங்களே கொசுக்களை உற்பத்தி செய்தால் அது இன்னும் பிரச்சனை ஆகிவிடுமே என யோசித்த கிராம நிர்வாகம், இந்த ஆப்ஃபர் ஒரு மாதத்திற்கு மட்டுமே இருக்கும் எனவும், டெங்கு தொற்று எண்ணிக்கை குறைந்ததும் நீக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பால், எந்திரன் - 1 படத்தில் ரங்கூஸ்கி கொசுவை சிட்டி தேடிப்பிடிப்பதை போல அந்த கிராம மக்கள் கொசுக்களை துரத்தி பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒரு திரைப்படத்தில் மூட்டைப் பூச்சியை கொல்லும் நவீன மெஷின் என்று சிறிய உரலை விற்பனை செய்து மோசடியில் ஈடுபடுவார்... அதுபோல மருந்து அடித்தால் இறந்துவிடும் கொசுவை தேடிப்பிடித்து கொண்டு வாங்க அதுக்கு சன்மானமும் வழங்கப்படும் என்ற அறிவிப்பு விநோதமாகவே பார்க்கப்படுகிறது...
What's Your Reaction?






