பத்து மணிநேரம் நடைபெற்ற விசாரணை.. அமலாக்கத்துறை அழைத்தாள் ஆஜராக தயார்- கதிர் ஆனந்த்

எம்.பி. கதிர் ஆனந்திடம் அமலாக்கத்துறையினர் 10 மணிநேரத்திற்கு மேலாக விசாரணை நடத்திய நிலையில் அமலாக்கத்துறையினர் விசாரணைக்கு அழைத்தால் வருவேன் என கதிர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

Jan 23, 2025 - 07:51
 0
பத்து மணிநேரம் நடைபெற்ற விசாரணை.. அமலாக்கத்துறை அழைத்தாள் ஆஜராக தயார்- கதிர் ஆனந்த்
எம்.பி. கதிர் ஆனந்த்

கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில்  வேலூர் மக்களவைத் தொகுதியில்  அமைச்சர் துரைமுருகன் மகனும், திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த், வாக்காளர்களுக்கு  பணம் கொடுத்ததாக புகார் எழுந்தது. இதன்பேரில் நடந்த வருமான வரித்துறை சோதனையில், கதிர் ஆனந்துக்கு நெருக்கமாக இருக்கும் நபர்கள் கண்காணிக்கப்பட்டு, காட்பாடியை சேர்ந்த திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசனின் வீடு, கதிர் ஆனந்த் வீடு, அவரின் கல்லூரிகளில் அதிரடி சோதனை நடைபெற்றது. 

அப்போது, கணக்கில் வராத 11 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணம் குறித்து உரிய விளக்கம் கிடைக்கவில்லை என கூறிய  வருமான வரித்துறை சட்ட விரோத பண பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாக வழக்குப்பதிவு செய்தது.  இந்த வழக்கில் கடந்த ஜனவரி 3-ஆம் தேதி திமுக எம்.பி கதிர் ஆனந்த்தின் காட்பாடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. கதிர் ஆனந்துக்கு சொந்தமான  பொறியியல் கல்லூரியிலும் சோதனை நடைபெற்றது.

சோதனையின் முடிவில் கதிர் ஆனந்த் வீடு மற்றும் அலுவலகத்தில் இருந்து 75 லட்சம் ரொக்க பணம், 13 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் எம்.பி கதிர் ஆனந்த் விசாரணைக்கு நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சார்பில் சம்மனும் வழங்கப்பட்டு இருந்தது. இந்த சம்மனை ரத்து செய்யக்கோரி கதிர் ஆனந்த் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கானது சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 

வழக்கை விசாரித்த நீதிபதி அமலாக்கத்துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கூறியும், சம்மனை ரத்து செய்ய இயலாது என கூறியும் வழக்கை தள்ளுபடி செய்தது. இந்த நிலையில்  நேற்று காலை 10.30 மணியளவில் எம்.பி.கதிர் ஆனந்த், ஆயிரம் விளக்கு  அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் தொடர்ந்து 10 மணிநேரத்திற்கும் மேலாக அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எம்.பி.கதிர் ஆனந்த் பேசியதாவது, 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் அது தொடர்பான கேள்விகளுக்கான என்னுடைய விளக்கங்களை நான் தெளிவாக சொன்னேன். அமலாக்கத்துறையினர் விசாரணைக்கு அழைத்தால் வருவேன் என தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow