நீதிமன்ற உத்தரவு.. வெளியேற சொன்னால் தற்கொலை செய்து கொள்வோம்.. பொதுமக்கள் கவலை
அரும்பாக்கம் பகுதியில் வசித்து வரும் மக்களை வெளியேற கூறி நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் 40 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கும் தங்களை காலி செய்ய சொன்னால் தற்கொலை செய்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என மூதாட்டி ஒருவர் கண்ணீர் மல்க தெரிவித்தார்.
சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள வத்தலக்குண்டு ஆறுமுகம் நகர் பிரதான சாலையில் சக்தி விநாயகர் கோயில் உள்ளது. இந்த கோயில் மற்றும் அதனை ஒட்டி உள்ள இடங்களில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். இந்த கோயில் மற்றும் கோயிலை சுற்றி உள்ள இடமானது ரவிசங்கர் என்பவருக்கு சொந்தமானது எனக் கூறி அங்கிருந்து குடியிருப்பு வாசிகள் வெளியேற வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று இரவு அரும்பாக்கத்தில் உள்ள வத்தலக்குண்டு ஆறுமுகம் நகர் பிரதான சாலையில் உள்ள சக்தி விநாயகர் கோயில் அருகே போலீஸார் சாலைத் தடுப்புகளை கொண்டு வந்து வைத்துள்ளனர். தொடர்ந்து, விரைவில் இப்பகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என அப்பகுதிவாசிகளிடம் கூறியுள்ளனர். இத்தகைய சூழலில், தங்களுக்கு நீதிமன்ற உத்தரவு குறித்து எதுவும் தெரியாது எனவும் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் தங்களை முன்னறிவிப்பு இன்றி திடீரென்று தங்கள் வீடுகளில் இருந்து போலீஸார் வெளியேற்ற முயற்சிப்பதாகவும் குற்றஞ்சாட்டி சுமார் 50-க்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் உள்ள விநாயகர் கோயில் முன்பு நின்று தர்ணாவில் ஈடுபட்டனர்.
மேலும் படிக்க: வேலியே பயிரை மேய்வதா? காவல்துறையினர் மீது உயர்நீதிமன்றம் அதிருப்தி...!
இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் செய்தியாளர்களிடம் பேசியதாவது, இங்குதான் 40 வருடங்களுக்கு மேலாக வசித்து வருகிறோம். இந்தப் பகுதியை சுற்றிதான் எங்கள் வாழ்வாதாரம் அமைந்துள்ளது. தினக்கூலிக்குதான் வேலை பார்த்து வருகிறோம். இங்கிருந்து எங்களை வெளியேற சொன்னால் என்ன செய்வது? மின் கட்டணம், மாநகராட்சி வரி உள்ளிட்டவற்றை முறையாக அளித்து வருகிறோம். அப்படியிருந்தும் எங்களை இங்கிருந்து காலி செய்ய சொல்வது எப்படி நியாயமாகும்?
தமிழ்நாடு அரசு நாங்கள் இப்பகுதியிலேயே வசிப்பதற்கு உரிய ஆவணம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். மேலும், அப்பகுதியிலேயே வசிக்கும் மூதாட்டி பாக்கியலட்சுமி என்பவர் வயதான காலத்தில் எங்களை இங்கிருந்து வெளியேற கூறினால், தற்கொலை செய்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என கண்ணீர் மல்க தெரிவித்தார்.
What's Your Reaction?