தமிழ்நாடு

ரீல்ஸ் பார்த்துக்கொண்டே டிரைவிங்... ஓட்டுநருக்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட்... தமிழக அரசு அதிரடி!

ரீல்ஸ் பார்த்துக்கொண்டே அரசுப் பேருந்தை ஓட்டிய டிரைவரின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனையடுத்து லைஃப் டைம் செட்டில்மெண்ட் கொடுக்கும் விதமாக, போக்குவரத்துத் துறை அவர் மீது அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.

ரீல்ஸ் பார்த்துக்கொண்டே டிரைவிங்... ஓட்டுநருக்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட்... தமிழக அரசு அதிரடி!
ரீல்ஸ் பார்த்தபடி பேருந்து இயக்கிய ஓட்டுநர் டிஸ்மிஸ்

சென்னை: திருப்பதியில் இருந்து சென்னை மாதவரம் நோக்கி வந்த அரசுப் பேருந்தை பார்த்திபன் என்பவர் டிரைவிங் செய்துள்ளார். ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை உட்பட தொடர் விடுமுறை காரணமாக அதிகளவிலான பயணிகள் இந்தப் பேருந்தில் பயணித்துள்ளனர். ஆனால் பயணிகளின் பாதுகாப்பு குறித்து சிறிதும் அக்கறை இல்லாத ஓட்டுநர் பார்த்திபன், ரீல்ஸ் பார்த்தபடி பேருந்தை இயக்கியுள்ளார். திருப்பதியில் இருந்து கிளம்பிய பேருந்து, சென்னையை நெருங்கியதும், ஒரு கையில் ஸ்டியரிங்கை இயக்கியபடி, மற்றொரு கையில் செல்போனில் ரீல்ஸ் பார்க்கத் தொடங்கினார். 

சுமார் 2 கிலோமீட்டர் தூரம் வரை ரீல்ஸ் பார்த்துக்கொண்டே பேருந்தை இயக்கியதாக சொல்லப்படுகிறது. ஓட்டுநரின் அலட்சியத்தை பார்த்து பஸ்ஸில் பயணித்தவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மேலும், சாலையை கவனித்து பேருந்தை ஓட்டுமாறும் வலியுறுத்தியுள்ளனர். ஆனால், பயணிகள் என்னா சொன்னாலும், அதனை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து ரீல்ஸ் பார்த்துக்கொண்டே பேருந்தை இயக்கியுள்ளார். அப்போது பெண் பயணி ஒருவர், ஓட்டுநரின் இந்த ரீல்ஸ் மோகத்தை வீடியோ எடுத்து, நடத்துநரிடம் புகார் செய்துள்ளார்.  

ஆனால், நடத்துநரும் டிரைவரை கண்டித்ததாக தெரியவில்லை. இந்நிலையில், பேருந்து ஓட்டுநர் ரீல்ஸ் பார்த்துக்கொண்டே பஸ்ஸை இயக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனையடுத்து பயணிகளின் உயிரோடு விளையாடிய ஓட்டுநர் பார்த்திபனை உடனடியாக பணி நீக்கம் செய்வதோடு, அவரது உரிமத்தையும் ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். மேலும் இதுபோன்ற பொறுப்பில்லாத ஓட்டுநர்களுக்கு இனிமேல் பணி வழங்கக் கூடாது எனவும் குரல் எழுப்பி வந்தனர். 

இதனையடுத்து இந்தப் பிரச்சினை விஸ்வரூபம் எடுக்க, ஓட்டுநர் பார்த்திபன் மீது துறை ரீதியலான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள போக்குவரத்துத்துறை, “திருப்பதியில் இருந்து சென்னை மாதவரம் நோக்கி வந்து கொண்டிருக்கும் போது, ரீல்ஸ் பார்த்தபடி அரசுப் பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநர் என்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த காணொளியில் வரும் ஓட்டுநர் விழுப்புரம் கோட்டம், திருவள்ளூர் மண்டலம், கோயம்பேடு II பணிமனையைச் சார்ந்த தற்காலிக ஓட்டுனர் பார்த்தீபன் பணி எண்.Y6116 ஆவார். தவறு செய்த ஓட்டுநர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்போது நிரந்தர பணி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்” என குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி தற்காலிக ஓட்டுநராக பணியாற்றி வந்த பார்த்திபன், பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.