ஒரு உயிரிழப்பு கூட இல்லை... பருவமழைக்கு நாங்கள் தயார்! - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
உயிரிழப்பு இல்லாத தீபாவளியாக இந்த ஆண்டு தீபாவளி அமைந்துள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் மணி விழா நிகழ்வு சென்னை போட் கிளப் சாலையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக முன்னாள் மாணவர் மன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “அரசு திட்டங்களின் நிலை குறித்த மாவட்ட வாரியான கள ஆய்வை வரும் நவம்பர் 5,6 ஆம் தேதிகளில் கோவையில் இருந்து தொடங்குகிறார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின். நவம்பர் இரண்டாவது வாரத்தில் அரியலூர், பெரம்பலூர் ஆகிய பகுதிகளில் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இதனையடுத்து கோவையில் எல்காட் டைடல் பூங்காவை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். மேலும் சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படவுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
இதைத்தொடர்ந்து முதலமைச்சரின் கள ஆய்வு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்கிறார். கோவை மாவட்டத்தில் பொற்கொல்லர்களை சந்தித்து அவர்களது கருத்துக்களை கேட்டு அறிகிறார். இதையடுத்து அரசின் திட்டங்கள் பயனாளிகளை சென்று அடைந்துள்ளதா என்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளவும் முதலமைச்சர் திட்டமிட்டு உள்ளார். மேலும் தொழில் முனைவோர்கள் சிறு குறு தொழில் நிறுவனங்களை சார்ந்தவர்களையும் முதலமைச்சர் சந்திக்கிறார். கோவையைத் தொடர்ந்து அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களுக்கு கள ஆய்வுக்காக முதலமைச்சர் நவம்பர் இரண்டாவது வாரத்தில் செல்ல உள்ளார். உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் சார்பில் 60 ஆண்டுகளில் 11 மாநாடுகள் நடத்தி தமிழ் ஆராய்ச்சி குறித்தும் வளர்ச்சி குறித்தும் தொடர்ந்து செயலாற்றி வருகின்றனர்.
குரங்கம்மை பாதிப்பு உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பன்னாட்டு விமான நிலையங்களிலும் வெளிநாட்டிலிருந்து வருபவர்களை தொடர்ந்து ஸ்கிரீனிங் செய்து வருகிறோம். தமிழ்நாட்டில் அனைத்து விமான நிலையங்களிலும் Isolated ward அறை அமைக்கப்பட்டுள்ளது. சென்னை, மதுரை, கோவை ஆகிய அரசு மருத்துவமனைகளில் குரங்கமைக்கான சிகிச்சை பெறும் வகையில் 10 வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் 26 இடங்களில் குரங்குமைக்கான ஆராய்ச்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
விபத்துகள் இல்லாத தீபாவளியாக இந்தாண்டு அமைந்துள்ளது. வழக்கத்தை காட்டிலும் 20 சதவீதத்திற்கும் குறைவாகவே தீபாவளி நாளில் விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் உயிரிழப்பு இல்லாத தீபாவளியாக இந்த ஆண்டு தீபாவளி அமைந்துள்ளது. அரசு சார்பில் தீபாவளி பண்டிகையில் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது இந்த விழிப்புணர்வின் காரணமாக விபத்து இல்லாத தீபாவளியாக இந்த ஆண்டு அமைந்துள்ளது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சற்று முன்னதாகவே ஆரம்பித்துள்ளது. வடகிழக்கு பருவமழைக்காண காய்ச்சல் முகாம்கள் அனைத்து இடங்களையும் அரசு சார்பில் நடத்தப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?