வங்கதேசத்துக்கு வந்த சோதனை.. 7 முக்கிய சாதனைகளை படைத்த இந்திய அணி
வங்கதேசத்திற்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 133 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில், இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வங்கதேச அணி படுமோசமாக தோல்வியை தழுவியது.
அதேபோல், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் இரண்டு டி20 போட்டிகளிலும் வங்கதேசத்தை தோற்கடித்து இருந்தது இந்திய இளம் அணி. இதனையடுத்து 3ஆவது மற்றும் இறுதி டி20 போட்டி நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி, வங்கதேசத்தை மோசமாக கதற வைத்தது. பவுலர்கள் ‘போதும் எங்களை விட்டிடுங்க’ என்று கதறும் அளவுக்கு சம்பவம் செய்திருக்கிறார்கள்.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினார். அபிஷேக் சர்மா 4 ரன்களில் வெளியேறிய நிலையில், சூர்யகுமாருடன் இணைந்தார் சஞ்சு சாம்சன். இருவரும் இணைந்து, வங்கதேச வீரர்கள் வீசிய பந்துகளை மைதானத்தின் எல்லைக்கோட்டுக்கு அனுப்பிய நிலையில் இருந்தனர்.
இதனால் பவர்பிளே ஓவர்களில் 82 ரன்கள் எடுத்தனர். இதற்கிடையில், சஞ்சு சாம்சன் 22 பந்துகளில் அரைச்சதம் விளாசினார். அடுத்த 18 பந்துகளில் [40 பந்துகள்] சஞ்சு சாம்சன் 100 ரன்கள் விளாசி [9 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள்] சாதனை படைத்தார். குறிப்பாக, ரிஷத் ஹொசைன் வீசிய ஆட்டத்தின் 10ஆவது ஓவரில் தொடர்ந்து 5 சிக்ஸர்களை விளாசி அசத்தினார்.
சஞ்சு சாம்சனை தொடர்ந்து சூர்யகுமாரும் 23 பந்துகளில் அரைசதம் எடுத்தார். பின்னர், சஞ்சு சாம்சன் 47 பந்துகளில் 111 ரன்கள் எடுத்து வெளியேறினார். சூர்யகுமார் யாதவ் 35 பந்துகளில் 75 ரன்கள் [8 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள்] எடுத்து மஹ்மதுல்லா பந்துவீச்சில் அவுட்டானார். இருவரும் இணைந்து 2ஆவது விக்கெட்டுக்கு 173 ரன்கள் எடுத்தனர்.
இதோடு விட்டபாடில்லாமல், அடுத்து களமிறங்கிய ரியான் பராக் 13 பந்துகளில் 34 ரன்களும் [ஒரு சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள்], ஹர்திக் பாண்டியா 18 பந்துகளில் 47 ரன்கள் [4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள்] எடுத்து வங்கதேச பவுலர்களை சோதித்தனர். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 297 ரன்கள் எடுத்தனர். வங்கதேசம் அணி தரப்பில் தன்ஷிம் ஹசன் ரஹ்மான் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் களமிறங்கிய வங்கதேசம் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்து 133 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அதிகப்பட்சமாக தௌஹித் ஹிரிடோய் 63 ரன்களும், லிட்டன் தாஸ் 42 ரன்களும் எடுத்தனர். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.
இந்திய அணி சாதனைகள்:
வங்கதேசத்திற்கு எதிராக 297 ரன்கள் எடுத்ததன் மூலம், இந்திய அணி சர்வதேச டி20 போட்டிகளில் இரண்டாவது அதிகப்பட்ச ரன்களை பதிவு செய்தது. முன்னதாக, மங்கோலியா அணிக்கு எதிராக, நேபாளம் அணி 314 ரன்கள் எடுத்ததே அதிகப்பட்சமாகும்.
அதேபோல், இந்திய அணி தனது அதிகப்பட்ச ஸ்கோரை பதிவுசெய்தது. இதற்கு முன்னதாக கடந்த 2017ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக 260 ரன்கள் எடுத்ததே அதிகப்பட்சமாக இருந்தது.
இந்த போட்டியில் இந்திய அணி பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் மூலம் மட்டுமே, 232 [25 பவுண்டரிகள், 22 சிக்ஸர்கள்] ரன்கள் குவித்தது. இதன்படி பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் மூலம் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் இந்திய அணி முதலிடத்தை பிடித்துள்ளது.
வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் முதல் 10 ஓவர்களில் 154 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் முதல் 10 ஓவர்கலில் அதிக ரன்கள் எடுத்த அணிகளின் பட்டியலில் 3ஆவது இடத்தை பிடித்துள்ளது. முதலிடத்தில் ஸ்காட்லாந்து [ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 156 ரன்கள்] அணியும், இரண்டாவது இடத்தில் சைப்ரஸ் [எபிஸ்கோபி அணிக்கு எதிராக 154 ரன்கள்] அணியும் எடுத்துள்ளது.
இந்திய அணி மொத்தம் 18 ஓவர்கள் 10 ரன்களுக்கு மேல் [முதல் ஓவரில் 7 ரன்கள், ஒன்பதாவது ஓவரில் 9 ரன்கள்] எடுத்துள்ளது. சர்வதேச டி20 போட்டிகளில் ஒரு அணி பதிவு செய்த அதிகப்பட்ச ரன்ரேட் ஆகும். இந்த இரண்டு ஓவரையும் மெஹிதி ஹசன் வீசியது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, ஆஸ்திரேலியா அணி இலங்கை அணிக்கு எதிராக 2016ஆம் ஆண்டு 17 ஓவர்கள் 10க்கும் அதிகமான ரன்களை எடுத்தது.
இந்த போட்டியில் 111 ரன்கள் எடுத்ததன் மூலம், ஆடவர் டி20 போட்டிகளில் இந்திய விக்கெட் கீப்பர் அடித்த முதல் சதம் இதுவாகும். இதற்கு முன்னதாக, இஷான் கிஷன் 2022ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக 89 ரன்கள் எடுத்திருந்தார்.
சஞ்சு சாம்சன் 40 பந்துகளில் சதம் அடித்தார். இதுவே, இந்திய வீரரின் இரண்டாவது அதிவேக சதமாக அமைந்தது. முன்னதாக, 2017ஆம் ஆண்டு ரோஹித் சர்மா 35 பந்துகளில் சதம் அடித்திருந்தார்.
What's Your Reaction?