இந்தியாவை தவிர்த்து விட்டு உலக நாடுகள் எந்த முடிவையும் எடுக்க முடியாது- ஆளுநர் ஆர்.என்.ரவி

உலகில் இந்தியாவை தவிர்த்து விட்டு உலக நாடுகள் எந்த முடிவையும் எடுக்க முடியாது.  இந்தியா முழுவதும் விவேகானந்தரின் அருளும் ஆசீர்வாதமும் நிறைந்துள்ளது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

Jan 12, 2025 - 16:22
 0
இந்தியாவை தவிர்த்து விட்டு உலக நாடுகள் எந்த முடிவையும் எடுக்க முடியாது- ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவி

சுவாமி விவேகானந்தரின் 163-வது பிறந்த நாளை முன்னிட்டு கிண்டி ஆளுநர் மாளிகையில் தேசிய இளைஞர் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் ஆளுநர் ஆர்.என் ரவி மற்றும் சென்னை ராமகிருஷ்ணா மடத்திலிருந்து  ரகு நாயக்கனந்தா, ஆளுநரின் முதன்மை செயலாளர் கிரிலேஸ் குமார் ஆகியோர் கலந்து கொண்டு  சிறப்புரையாற்றினர். இந்நிகழ்வில் பள்ளி மற்றும் கல்லூரியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.  

பாரதியார் மண்டபத்தில்  வைக்கப்பட்டுள்ள விவேகானந்தர் உருவப்படத்திற்கு ஆளுநர்  ஆர்.என்.ரவி மலர் தூவி  மரியாதை செலுத்தினார். தேசிய இளைஞர் தின விழாவில் கலந்து கொண்டிருந்த பள்ளி மாணவ- மாணவிகள் ஆளுநர் முன்பாக சுவாமி விவேகானந்தரைப் பற்றி உரையாற்றினார்கள். தொடர்ந்து மாணவர்கள் முன்னிலையில் சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாற்று நிகழ்வுகள் விளக்க படத்துடன் விளக்கமளிக்கப்பட்டது. 

பின்னர் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது, பல ஆண்டுகள் ஆனாலும் சுவாமி விவேகானந்தரின் வரலாறு என்றும் மறையாது. விவேகானந்தர் இந்த தேசத்தை எப்படி உருவாக்க வேண்டும் என நினைத்தாரோ தேசம் இப்போது அந்த வழியில் உருவாகி வருகிறது. மேடையில் பேசிய மாணவர்கள் திறமையாக விவேகானந்தரை பற்றி எடுத்துக் கூறினார்கள். மாணவர்களின் உரை எனக்கே வியப்பையும் ஆர்வத்தையும் தந்தது. விவேகானந்தர் தன்னையே உணர்ந்த ஒரு துறவி. சுவாமி ராமகிருஷ்ண பரமஹம்சர் விவேகானந்தரை தொட்டு வாழ்த்தினார்.

விவேகானந்தரின்  உண்மையை பிடித்ததால் தான்  விவேகானந்தரை ராமகிருஷ்ண பரமஹம்சருக்கு பிடித்திருந்தது. விவேகானந்தர் ஒரு துறவி மட்டுமல்ல சிறந்த ஆற்றல் மிக்க பேச்சாளர் . ராமகிருஷ்ண பரம ஹம்சர் விவேகானந்தரின் குருவாக விளங்கினார். விவேகானந்தர் தேசம் முழுவதையும் சுற்றி  உள்ளார்.  கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறையில் அமர்ந்து தியானம் செய்தார், அந்த பாறையின் தியானம் விவேகானந்தரை தேசத்தையே திரும்பி பார்க்கும் வகையில்  இருந்தது. 

சுவாமி விவேகானந்தரை போல பலர் தமிழ்நாட்டிற்கு வந்து சிறப்பு சேர்த்துள்ளார்கள். தமிழ்நாடு புண்ணிய பூமியாக விளங்கி வருகிறது. உலக நாடுகளில் விவேகானந்தரின் புகழ் நம் தேசத்திற்கு நாகரீகத்தையும், அங்கீகாரத்தையும் வழங்கியுள்ளது.  இந்திய மக்களுக்கு விவேகானந்தரின் வாழ்க்கை உதாரணமாக அமையும். காலனி ஆதிக்கத்தின் போது இந்தியாவின் அடையாளத்தை ஆங்கிலேயர்கள் அழிக்க நினைத்தார்கள். ஆங்கிலேயர்கள் இந்தியர்களுக்கு பல வகைகளில் இன்னல்களை கொடுத்தார்கள். அவற்றையெல்லாம் நம் தேச மக்கள் ஒவ்வொன்றாக மறந்து இப்போது சுதந்திரமாக நிம்மதியாக வாழ்ந்து வருகிறார்கள். 

சுவாமி விவேகானந்தரின் மூலமாகவே பாரதியார்  உத்வேகம் பெற்றார். பல தேச கவிஞர்களுக்கு  விவேகானந்தர் தலைசிறந்த முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளார். சுபாஷ் சந்திர போஸ் விவேகானந்தரின் வார்த்தைகள்  மூலமாக உத்வேகம் பெற்றவர். இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு முழு முதற் காரணமாக இருந்தவர் சுவாமி விவேகானந்தர். உலக நாடுகளில் நம் தேசமான இந்தியா தனித்துவமான தலைசிறந்த நாடாக விளங்கி வருகிறது. இமயமலை முதல் இந்திய பெருங்கடல், அரபிக்கடல் என எல்லா இடங்களிலும் இந்தியா முழுவதும் பல கல்வி  நிறுவனங்கள் சிறப்பானதாக செயல்பட்டு வருகிறது. 

இந்தியாவில் வாழும் அனைத்து மக்களும் தாங்கள் பிறந்த பகுதியில் மட்டும் வாழ்வது போல எண்ணாமல் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பகுதியிலும் ராமேஸ்வரம், காசி, கங்கா , திருப்பதி என எல்லா பகுதிகளிலும் தாங்கள் வாழ்வதாக கருதி வாழ்ந்து வருகிறார்கள். பல்வேறு மாநிலங்களில் பல்வேறு மொழிகள் பேசப்படுகிறது. பல்வேறு உணவுகள் செய்யப்படுகிறது. ஆனால் நம் தேசம் ஒரே குடும்பம் தான். மிகப்பெரிய ஒரே குடும்பம் தான் நம் இந்திய தேசம். நாம் அனைவரும் பாரத தேசத்தால் ஒன்றுபட்டுள்ளோம். கடந்த 10  ஆண்டுகளில் தலைசிறந்த தலைவர்  நம் நாட்டுக்கு கிடைத்த காரணத்தால் தேசம் ஒரே குடும்பமாக வளர்ச்சியை நோக்கி பயணித்து வருகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா எதிர்பாராத வளர்ச்சியை அடைந்து வருகிறது.  உலகில் இந்தியாவை தவிர்த்து விட்டு உலக நாடுகள் எந்த முடிவையும் எடுக்க முடியாது.  இந்தியா முழுவதும் விவேகானந்தரின் அருளும் ஆசீர்வாதமும் நிறைந்துள்ளது. எனது அருமை சகோதர சகோதரிகளே நீங்கள் அனைவரும் கொடுத்து வைத்தவர்கள்,  வளர்ச்சியடைந்த தேசத்தை உருவாக்கும் தலைவர் நாட்டை ஆளும் காலகட்டத்தில் மாணவர்களாக இருப்பது  பெரும் பாக்கியம். சிறந்த நாடாக இந்தியாவை கட்டமைக்க தேச விழிப்புணர்வு அவசியம். அதே போல  இந்தியாவின் முழு வளர்ச்சிக்கு இளைஞர்களின் பங்கு முழு அவசியம்.

காலநிலை, வேளாண்மை, விண்வெளி என எல்லாத்துறைகளிலும்  இந்தியா சிறப்பான நாடாக விளங்கி வருகிறது. சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான இன்றிலிருந்து  மாணவராகிய  நீங்கள்  அனைவரும் இந்தியாவின் வளர்ச்சியை எண்ணி  செயல்பட வேண்டும். நண்பர்களே உங்கள் அனைவருக்கும் தலைசிறந்த எதிர்காலம் உள்ளது. அதை முறையாக பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேறுங்கள். மாணவர்களாகிய உங்களின் முன்னேற்றம் தான் இந்தியாவின் எதிர்காலம். எல்லாவற்றையும் எதிர்கொள்ளுங்கள், கடினமாக உழையுங்கள்,  நாட்டுக்காகவும் உங்கள் குடும்பத்துக்காகவும் பாடுபட்டு தேசத்தை பெருமை அடையச் செய்யுங்கள் என தெரிவித்தார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow