76-வது குடியரசு தின விழா: உயர்நீதி மன்றத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்த நீதிபதி
நாட்டின் 76-வது குடியரசு தினத்தையொட்டி சென்னை உயர்நீதி மன்றத்தில் தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
76-வது குடியரசு தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு 21 குண்டுகள் முழங்க தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, பாதுகாப்பு வீரர்களின் அணி வகுப்பு மரியாதையும் ஏற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில், இந்தோனேசிய ஜனாதிபதி பிரபோவா சுபியாண்டோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
சென்னை காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகில் தமிழக அரசு சார்பில் குடியரசு தினவிழா கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதன் ஒரு பகுதியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். உயர்நீதி மன்ற வளாகத்தில் உள்ள சமநீதி கண்ட சோழன் சிலைக்கு அருகில் நடந்த குடியரசு தின விழாவில், தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் தேசிய கொடி ஏற்றிவைத்து மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
பின்னர், சென்னை உயர் நீதிமன்றத்தில் 20 ஆண்டுகள் பணி காலத்தை நிறைவு செய்த ஓட்டுநர்கள், காவல்துறை அதிகாரிகள், அலுவலக உதவியாளர்கள் உள்ளிட்ட உயர்நீதி மன்ற ஊழியர்களுக்கு தலைமை நீதிபதி, சான்றிதழ்கள் வழங்கி கெளரவித்தார். மத்திய தொழிலக பாதுகாப்பு படையின் மோப்ப நாய்கள் பல்வேறு சாகசங்களை செய்து அசத்தின. அப்போது பயிற்சி பெற்ற நாய், தலைமை நீதிபதிக்கு பூங்கொத்து வழங்கியது பார்வையாளர்களை ஆச்சர்யபடுத்தியது.
தொடர்ந்து மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்களும் பல்வேறு சாகசங்களை நிகழ்த்தி காட்டினர். இந்நிகழ்ச்சியில், சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள், மத்திய - மாநில அரசு வழக்கறிஞர்கள், தலைமைச் செயலாளர் முருகானந்தம், சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும், காவல் துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
முன்னதாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் நடந்த குடியரசு தின விழாவில் பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ், தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
What's Your Reaction?