முதல்முறையாக வேளாண் விளை பொருட்களுக்கு புவிசார் குறியீடு.. விவசாயிகள் மகிழ்ச்சி
தமிழகத்தில் முதல் முறையாக வேளாண் விளை பொருளான கும்பகோணம் வெற்றிலை மற்றும் பூ மாலையான தோவாளை மாணிக்க மாலை ஆகிய இரண்டிற்கும் புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

தமிழகத்தில் காஞ்சி பட்டு, மதுரை சுங்குடி சேலை, தஞ்சாவூர் ஓவியம், ஆரணிப்பட்டு, பத்தமடை பாய் உள்ளிட்ட 62 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மாணிக்க மாலை, கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
தஞ்சையில் புவிசார் குறியீடு வழக்கறிஞர் சஞ்சய் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "டெல்டா மாவட்டங்களில் பல நூறு ஆண்டுகளுக்கு மேலாக கும்பகோணம் வெற்றிலை பயிரிடப்பட்டு வருகிறது.
மருத்துவ குணம் கொண்ட இந்த கும்பகோணம் வெற்றிலை பல நோய்களை தீர்த்து வருவதாக ஆராய்ச்சி மூலம் தெரிய வந்துள்ளது. கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பம் செய்யப்பட்டது. இதனை புவிசார் குறியீடு அங்கீகார குழுவினர் ஆய்வு செய்து கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு வழங்கி உள்ளனர்.
அதேபோல், வெள்ளை அரளி, சிவப்பு அரளி, பச்சை நொச்சி, சம்பா நாறு கொண்டு செய்யப்படுகிற கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மாணிக்க மாலைக்கும் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. வழக்கமாக மாலை உருண்டை வடிவில் இருக்கும் ஆனால் தோவாளை மாணிக்க மாலை பட்டை வடிவத்தில் இருக்கும். தமிழகத்தில் பூமாலைக்கு புவிசார் குறியீடு தோவாளை மாணிக்க மாலைக்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் முதல் முறையாக வேளாண் விளைப் பொருள் மற்றும் பூமாலை ஆகிய இரண்டிற்கு புவிசார் குறியீடு பெற்று பெருமை சேர்க்கப்பட்டு உள்ளது” என்று வழக்கறிஞர் சஞ்சய் காந்தி தெரிவித்தார்.
What's Your Reaction?






