மும்பையில் வசித்து வரும் 23 வயது பெண் ஒருவர், தன்னுடைய கல்லூரி விடுமுறை நாட்களில் சென்னை, வளசரவாக்கத்தில் அமைந்துள்ள உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். அந்த பெண் R-9 வளசரவாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான சுஜித் என்பவர், அப்பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை பதிவு செய்து வைத்து கொண்டு, அப்பெண்ணை மிரட்டி, பணம் கேட்டுள்ளார்.
சுஜித்தின் மிரட்டலுக்கு பயந்த அந்த பெண்ணும் தொடர்ந்து பணம் அனுப்பி வந்ததாகவும், பின்னர் மீண்டும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பணம் ரூ.50,000 அனுப்ப வேண்டும் என்று சுஜித் மற்றும் அவரது தந்தை வின்சென்ட் ஆகிய இருவரும் சேர்ந்து மிரட்டியுள்ளனர்.
அப்பெண், தன்னிடம் பணம் இல்லையென்று கூறியதால், சுஜித் அந்தரங்க புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளதாக கூறி புகார் அளித்துள்ளார். இது குறித்து, R-9 வளசரவாக்கம் காவல் நிலைய போலீசார், பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்க்கொண்டனர்.
புகாரின் அடிப்படையில் R-9 வளசரவாக்கம் காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை செய்ததில், புகார் அளித்த பெண் கூறியது அனைத்தும் உண்மையென தெரியவந்தது. இந்த வழக்கில் பணம் கேட்டு மிரட்டிய சுஜித் மற்றும் அவருடைய தந்தை வின்சென்ட் ஆகிய இருவரையும், கன்னியாகுமரி மாவட்டம் மேக்குவளைவிடு என்ற ஊரில் வைத்து இருவரையும் கைது செய்தனர்.
மேலும், அவர்களிடமிருந்து 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணைக்குப்பின்னர் கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.
தந்தை மற்றும் மகன் இருவரும் பெண் ஒருவரை பணம் கேட்டு மிரட்டி, அவரின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்ட சம்பவம் பொது மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது போன்று சமூக வலைதளத்தின் மூலம் நாள்தோறும் பல்வேறு செய்திகளை நாம் கடந்தாலும், குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு தான் வருகிறது. இது போன்ற பிரச்சினைகளில் இருந்து, தங்களுடைய சுய பாதுகாப்பை ஒவ்வொருவரும் உறுதி செய்ய வேண்டும். யாருக்கோ நடக்கிறது என்று கடந்து செல்லாமல், அனைவரும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதே பலரது கருத்தாக உள்ளது.